பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 782

               85
ஆயது மறைந்தவ் வவையைக் காட்டியதன்
சேயது மொழிகேட் டிதுநீ செத்தடைந்த
நோயது பயனென் றிரங்கி நொந்தழுத
தாயது நமக்கா மெனநோய் தாங்கினளால்.
 
ஆயதும் அறைந்து, அவ் அவையைக் காட்டிய தன்
சேயது மொழி கேட்டு, "இது நீ செத்து அடைந்த
நோயது பயன்!" என்று இரங்கி நொந்து
அழுத தாய், அது நமக்கு ஆம் என, நோய் தாங்கினள் ஆல்.

     அடக்கத்திற்குப் பின் பாதலத்தில் நிகழ்ந்ததையும் எடுத்துக் கூறி,
அந்த நல்லோர் கூட்டத்தையும் காட்டிய தன் மகனின் சொல்லைக் கேட்டு,
"இது நீ இறந்து அடைந்த துன்பத்தின் பயனே ஆகும்!" என்று இரங்கி
வருந்தி அழுததாய், அது நமக்கும் நன்மை விளைத்தது என்று கண்டு, அத்
துன்பத்தைத் தாங்கிக் கொண்டாள்.

 
                86
இந்நிலைப் பலவும் பலநா ளியைந்தன்னார்
தந்நிலை செல்லா தரித்த காலிவண்வீட்
டந்நிலை சென்ற தன்ன வானந்தச்
செந்நிலை வடிவங் காட்டிச் செலுத்துவரே.
 
இந் நிலைப் பலவும் பல நாள் இயைந்து, அன்னார்,
தம் நிலை செல்லா, தரித்த கால், இவண் வீட்டு
அந் நிலை சென்றது அன்ன, ஆனந்தச்
செந் நிலை வடிவம் காட்டிச் செலுத்துவரே.

     திருமகனும் சூசையும், இம்முறைப்படி பலவும் பலநாள் பொருந்த
அமைந்து, தம் நிலைத்த இடமாகிய வானுலகம் சென்று சேராமல்,
இம்மண்ணுலகில் தங்கியிருந்த காலத்து, இங்கேயே மோட்ச வீடாகிய
அந்நிலையைச் சென்றடைந்தது போல, மகிழ்ச்சியில் செம்மையாக
நிலைகொண்ட தம் வடிவத்தை மரியாளுக்குக் காட்டி இன்ப மூட்டினர்.

               உத்தானப் படலம் முற்றும்

           ஆகப் படலம் 35க்குப் பாடல்கள் 3482