பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 783

முப்பத்தாறாவது
 

   
முடி சூட்டு படலம்
 

     சூசை விண்ணுலகிலும் மண்ணுலகிலும் மன்னனாக முடி சூட்டப்
பெற்ற செய்தி கூறும் பகுதி.

             திருமகனும் சூசையும் விண்ணேறுதல்

     - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்

 
              1
அன்ப ருந்திய வாண்டகை மாய்தலாற்
றுன்ப ருந்திய யாவருந் தொய்யலிற்
பின்ப ருந்திய காட்சியின் பெற்றியா
லின்ப ருந்தலி லெல்லையொன் றில்லையால்.
 
அன்பு அருந்திய ஆண்டகை மாய்தலால்
துன்பு அருந்திய யாவரும், தொய்யலின்
பின்பு அருந்திய காட்சியின் பெற்றியால்,
இன்பு அருந்தலில் எல்லை ஒன்று இல்லை ஆல்.

     அன்பு செறிந்த ஆண்டவனாகிய திருமகன் முன்னே இறத்தலால்
துன்பம் உட்கொண்ட யாவரும், பின்பு மகிழ்ச்சியோடு தாம் சுவைத்த
உயிர்ப்புக் காட்சியின் தன்மையால், இன்பம் அருந்தியதற்கு எல்லையென
ஒன்றும் இல்லை.

 
            2
நீத நன்னெறி தந்தரு ணேமியா
னாத னின்னண நாற்பது நாளிருந்
தாத வன்றிரி யந்தர மேற்செலக்
காத லுண்டுக ருத்துமுண் டானரோ.
 
நீத நல்நெறி தந்து, அருள் நேமியான்
நாதன், இன்னணம் நாற்பது நாள் இருந்து,
ஆதவன் திரி அந்தர மேல் செலக்
காதல் உண்டு, கருத்தும் உண்டான் அரோ.

     நீதி சார்ந்த நல்ல வேத நெறியைக் காட்டித் தந்து, கருணைச்
சக்கரத்தால் உலகை ஆளும் ஆண்டவன், இவ்வாறு நாற்பது நாள் இங்கே
தங்கியிருந்த, பின், பகலவன் உலாவும் வானத்திற்கும் மேலே செல்ல ஆசை
கொண்டு, அதற்குக் கருத்தும் கொண்டான்.