பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 784

                       3
விதியெ ழுந்தமெய் வேதநன் னாதனுந்
துதியெ ழுந்தகைத் தாதையஞ் சூசையு
மதியெ ழுந்தப தத்தினள் வாழ்த்தினர்
நிதியெ ழுந்தவிண் ணேடுத நாமென்றார்.
 
விதி எழுந்த மெய் வேத நல் நாதனும்,
துதி எழுந்த கைத் தாதை அம் சூசையும்,
மதி எழுந்த பதத்தினள் வாழ்த்தினர்,
"நிதி எழுந்த விண் நேடுதும் நாம்" என்றார்.

     விதிமுறைப்படி அமைந்த உண்மை வேதத்தை உலகிற்கு அருளிய
நல்ல ஆண்டவனும், புகழ் கொண்டு உயர்ந்த வளர்ப்புத் தந்தையாகிய
சிறந்த சூசையும், பிறை மதியின் மேல் எழுந்து நின்ற அடிகளை உடைய
மரியாளை வாழ்த்தியவராய், "எல்லாச் செல்வங்களாலும் உயர்ந்த
விண்ணுலகு செல்ல நாங்கள் விரும்புகின்றோம்" என்றனர்.

 
                         4
புண்கு டைந்தவேல் போலுரை கேட்டுநான்
விண்கு டைந்தவி டிப்பட மின்னினீர்
கண்கு டைந்தவில் காட்டிப்போ தீரெனாப்
பண்கு டைந்தசொ லாள்பணிந் தேங்கினாள்.
 
புண் குடைந்த வேல் போல் உரை கேட்டு, "நான்
விண் குடைந்த இடிப்பட, மின்னின், நீர்
கண் குடைந்த வில் காட்டி, போதீர்!" எனா
பண் குடைந்த சொலாள், பணிந்து ஏங்கினாள்.

     யாழினின்று மீட்டிய இசை போலும் இனிய சொல்லை உடைய
மரியாள், புண் புகுந்த வேல் போன்ற அச்சொல்லைக் கேட்டு, "நான்
வானத்தைக் குடைந்து வந்த இடிக்கு ஆளாகுமாறு, நீங்கள் கண்ணைப்
பறித்த ஒளி வடிவம் காட்டி, மின்னல் போல் மறையப் போகிறீர்களோ!"
என்று கூறி, வணங்கி ஏங்கினாள்.