பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 787

                     9
புண்ணைக் காக்கும ருந்தினைப் போன்றுளோய்
கண்ணைக் காக்குமி மைக்கிணை காதலான்
மண்ணைக் காக்கெனை மண்ணிடைக் காத்தலால்
விண்ணைக் காக்கர சாகவி ளங்குவாய்.
 
"புண்ணைக் காக்கும் மருந்தினைப் போன்று உளோய்,
கண்ணைக் காக்கும் இமைக்கு இணை காதலால்,
மண்ணைக் காக்கு எனை மண்ணிடைக் காத்தலால்,
விண்ணைக் காக்கு அரசாக விளங்குவாய்.

     "புண்ணை ஆற்றிக் காக்கும் மருந்து போல் அமைந்தவனே,
கண்ணைக் காக்கும் இமைக்கு ஒப்பான அன்போடு, இம்மண்ணுலகை
மீட்டுக் காக்கும் என்னையே நீ இம்மண்ணுலகில் காப்பாற்றி வந்தமையால்,
இனி விண்ணுலகத்தையே ஆளும் அரசனாக விளங்குவாய்.

 
            10
ஒழிவ ருந்தவ தாவிதற் கோதிய
மொழிவ ரும்படி முற்றுவன் கோத்திர
வழிவ ருஞ்சுத னீமணும் வானமு
மழிவ ருந்தக வோடர சாளுவாய்.
 
"ஒழிவு அருந் தவ தாவிதற்கு ஓதிய
மொழி வரும்படி, முற்று அவன் கோத்திர
வழி வரும் சுதன் நீ, மணும் வானமும்,
அழிவு அருந் தகவோடு, அரசு ஆளுவாய்.

     "ஓயாத தவம் பூண்ட தாவீதனுக்குக் கடவுள் கூறிய சொல்லில்
அமைந்துள்ளபடி, நிறைவாக அவன் குடும்பப் பரம்பரையில் அமைந்துவரும்
மகனாகிய நீ, அழியாத சிறப்போடு, மண்ணுலகையும் வானுலகையும்
அரசனாக நின்று ஆளுவாய்.

     தாவீதனுக்கு ஓதிய மொழி, 1 நாளாகமம், 22 : 6 - 10 காண்க. வளன்
சனித்த படலம் 38-ம் பாடலும் காண்க.