பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 789

               13
வெளிபொ திர்ந்தக ணங்களுள் வேய்ந்தநல்
லொளிபொ திர்ந்த விருசுட ரொத்திவர்
களிபொ திர்ந்தக ணங்களி னாப்பணே
நளிபொ திர்ந்தந யங்கொடு வேறினார்.
 
வெளி பொதிர்ந்த கணங்களுள் வேய்ந்த நல்
ஒளி பொதிர்ந்த இரு சுடர் ஒத்து, இவர்,
களி பொதிர்ந்த கணங்களின் நாப்பணே
நளி பொதிர்ந்த நயம் கொடு ஏறினார்.

     இவ்விருவரும், வான வெளியில் நிறைந்து கிடந்த
விண்மீன்களிடையே தோன்றிய நல்லொளி நிறைந்த ஞாயிறும் திங்களுமாகிய
இரு சுடர்கள் போன்று, மகிழ்ச்சி நிறைந்த வானவர் அணிகளின் நடுவே,
குளிர்ச்சி நிறைந்த இன்பங் கொண்டு ஏறிச் சென்றனர்.

     'இருசுடர்' வரும் வேறு பாடல்கள் 35 : 71,82. 'நயங்கொடு' என்பதில்
கொடு என்பது இடைக்குறை.

 
              14
வான்வ ழங்குத ளங்கள்வ குப்பெலா
மீன்வ ழங்குமு ருக்கொடு வேய்ந்துறித்
தேன்வ ழங்கு தெரியல் வழங்கிடக்
கோன்வ ழங்குவ ளங்கொடு வேறினார்.
 

வான் வழங்கு தளங்கள் வகுப்பு எலாம்,
மீன் வழங்கும் உருக் கொடு வேய்ந்து உறி,
தேன் வழங்கு தெரியல் வழங்கிட,
கோன் வழங்கு வளம் கொடு ஏறினார்.


     வானுலகில் உலாவும் வானவர் படைகளின் பிரிவுகளெல்லாம், விண்
மீன்களில் திகழும் ஒளி உருவங் கொண்டு தோன்றி வந்து, தேன்
பொருந்திய மலர் மாலைகளை இருவர்க்கும் வழங்கி எதிர் கொள்ள,
அவ்விருவரும் அரசனுக்குரிய வளத்தோடு ஏறிச் சென்றனர்.

     'வகுப்பு எலாம்' எனவே, முன் உடன் வந்த வானவரோடு, ஒன்பது
படையணிகளில் எஞ்சிய எல்லாரும் எதிர்கொள்ள வந்தனரென்று கொள்க.