பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 790

              15
வில்லெ ழுந்தது காணவி ரும்பியன்
றெல்லெ ழுந்திணை தோர்த்தென நாணலின்
மெல்லெ ழுந்துசி வந்தது மிக்கவர்
சொல்லெ ழுந்தசு டர்க்கொடு வேறினார்.
 
வில் எழுந்தது காண விரும்பி, அன்று
எல் எழுந்து, இணை தோர்த்து என, நாணலின்
மெல் எழுந்து சிவந்தது. மிக்கவர்,
சொல் எழுந்த சுடர்க் கொடு ஏறினார்.

     ஒளிக்கதிர் எழுந்ததைக் காண விரும்பி, அன்று ஞாயிறு எழுந்து
வந்து, தான் ஒப்பாதலில் தோற்றாற் போல, நாணத்தோடு மெல்ல எழுந்து
சிவந்து தோன்றியது. மேன்மை மிக்க அவ்விருவரும், சொல்லுக்கு
அடங்காமல் மேலோங்கிய அத்தகைய சுடரொளி உருவத்தோடு ஏறிச்
சென்றனர்.

     'ஆகையால் உதய நேரத்தில் எழுந்தருளினாரென்பது கருத்து'
என்பது பழையவுரை அடிக்குறிப்பு.

 
             16
மிகைவி ரிந்தவி யப்பிமை யாதிவண்
டொகைவி ரிந்துநின் றார்துயர் தீர்ப்பவான்
முகைவி ரிந்த மணிமுகில் மூடியவ்
வகைவி ரிந்தவில் வாகனத் தேறினார்.
 
மிகை விரிந்த வியப்பு, இமையாது, இவண்
தொகை விரிந்து நின்றார் துயர் தீர்ப்ப,
வான் முகை விரிந்த மணி முகில் மூடி, அவ்
வகை விரிந்த வில் வாகனத்து ஏறினார்.

     அளவின் மிகுந்த வியப்போடு, இமை கொட்டாமல், அம்மலையடியில்
தொகை மிகுந்து கூடி நின்றவர் தம் துயரத்தைப் போக்கும் பொருட்டு,
வானத்தில் மலர்போல் விரிந்த அழகிய மேகம் ஒன்று மூடி மறைக்க,
அவ்விதமாய் விரிந்த ஒளி வீசும் மேக வாகனத்தில் ஏறிச் சென்றனர்.