பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 792

அடைத்த வாயில் திறந்தானை அணுகி, அணுகும் அணங்கு எல்லாம்
உடைத்த வண்ணத்து, உளத்து எஞ்சா, ஒத்த நெறி நின்றார் அல்லால்,
படைத்தது இவறி, படைத்தானைப் பகைப்பார் இங்கண் புகார் என்னா,
துடைத்த நோய்க்கு ஓர் மருந்து அன்னான், தொடர் நல் குழு சூழ்
                                        வரப்புக்கான்.


     அடைத்திருந்த மோட்ச வாயிலைத் திறந்து விட்டவனாகிய
திருமகனைச் சரணாக அணுகி, தம்மை அணுகும் துன்பமெல்லாம்
உடைத்தெறிந்த தன்மையாக, தம் உள்ளந் தளராமல், அவனுக்கு ஏற்ற
அறநெறியில் நிலைகொண்டவரே யல்லாமல், படைக்கப்பட்ட பொருள்களையே
விரும்பிப் பற்றி, அவற்றையெல்லாம் படைத்த
ஆண்டவனைப் பகைப்பவர் இங்கு வந்து நுழைய மாட்டாரென்று சொல்லி,
தானே துடைத்துப் போக்கிய பாவ நோய்களுக்கெல்லாம் ஒரே மருந்து
போன்றவனாகிய திருமகன், தன்னைத் தொடர்ந்து வந்த நல்லவர் கூட்டம்
சூழ்ந்து வர மோட்ச வீட்டுள் புகுந்தான்

 
                      19
புக்க வனந்த நரதேவன் பொலிவா னவர்தந் நிலைகடந்தே
தொக்க சிந்தை நிலைகடந்த சுகத்திற் பிதாவீற் றிருந்தாளு
மிக்க சுடர்சூ ழாசனத்தில் வீழ்ந்தான் றொழுதா னுளந்தூண்டி
மக்க டம்மே லருத்தியெழீஇ வரையா வன்பா னுரைகொண்டான்.
 
புக்க அனந்த நர தேவன், பொலி வானவர் தம் நிலை கடந்தே,
தொக்க சிந்தை நிலை கடந்த சுகத்தில் பிதா வீற்றிருந்து ஆளும்
மிக்க சுடர் சூழ் ஆசனத்தில் வீழ்ந்தான்; தொழுதான்; உளம் தூண்டி,
மக்கள் தம் மேல் அருத்தி எழீஇ, வரையா அன்பான், உரை
                                         கொண்டான் :

     அவ்வாறு புகுந்த எல்லையற்ற மனிதனும் இறைவனுமாகிய திருமகன்,
பொலிவுடன் விளங்கும் வானவர் நிலையைக் கடந்து, திரண்ட சிந்தனையின்
நிலையையும் கடந்து நின்ற பேரின்ப நிலையில் தனது தந்தையாகிய கடவுள்
வீற்றிருந்து ஆளும் மிக்க ஒளி சூழ்ந்த அரியணைமுன் விழுந்து தொழுது,
மக்கள் மீது தான் கொண்ட அன்பு மேலோங்கி நின்று தன் உள்ளத்தைத்
தூண்டுதலால், அளவில்லாத அன்போடு, பின்வருமாறு சொல்லலானான் :