பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 797

           25
உன்னோ டொன்றாய் மூவுலக
     மொருங்கு நிழற்றும் வயத்தெனக்கு
மென்னோ டென்னைக் கன்னிவழா
     தீன்றாட் குந்தா னிழல்செய்த
மின்னோ டியவான் மணியொப்ப
     விரிபூங் கொடியோன் றகுமாட்சி
நின்னோ டினியா னென்னுரைப்ப
     நினைவுங் கடந்த காட்சிநலோய்.
 
"உன்னோடு ஒன்றாய் மூ உலகம் ஒருங்கு நிழற்றும் வயத்து எனக்கும்,
என்னோடு, என்னைக் கன்னி வழாது ஈன்றாட்கும் தான் நிழல் செய்த,
மின் ஓடிய வான் மணி ஒப்ப விரி பூங் கொடியோன் தகு மாட்சி,
நின்னோடு இனி யான் என் உரைப்ப, நினைவும் கடந்த காட்சி நலோய்?்

     "நினைவையும் கடந்த காட்சியால் எல்லாம் அறியும் நல்லவனே,
உன்னோடு ஒன்றாக நின்று மூன்று உலகங்களையும் ஒருங்கே
நிழலிட்டுக்காக்கும் வல்லமையுள்ள எனக்கும், என்னோடு, கன்னிமை
கெடாமல் என்னைப் பெற்ற மரியாளுக்கும் தானே நிழலிட்டுக் காத்தவனும்,
ஒளி பொருந்திய வான் மணிக்கு ஒப்பாக விரிந்த மலர்க் கொடியை
உடையவனுமாகிய இவனது மாண்பின் தகுதியை, இனி நான் உன்னோடு
உரைக்க வேண்டுவதென்ன?

 
          26
இன்னா னின்ன தகவுளனா
     யென்னோ டுடற்கொண் டீங்கடைந்தான்
பன்னா டொடர்ந்த பழியறநான்
     பாய்செங் குருதி தந்திறப்ப
வென்னா லாய பயன்காட்ட
     விவனே மக்கட் கரசனெனா
மின்னர் மணியார் முடிசூட்டல்
     வேண்டு மையா வெனப்பணிந்தான்.