பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 801

     'பல்லாண்டு வாழ்க!' என்னும் வாழ்த்தொலிகள் முழங்கின;
மகிழ்ச்சிகள் நிறைந்தன; சூசை தன்கையில் தாங்கியிருந்த மலர்க் கொடியில்
சிறந்த தேனோடு பூத்த மலர்கள் மூவாயிரத் தறுநூற்றுப் பதினைந்து. அம்
மலர்களால் தொடுத்த மாலைகள் முப்பத்தாறு. வானவர் அவற்றைக்
கடவுளின் குளிர்ந்த ஒளியுள்ள அடியில் சிறந்த இன்பத்தோடு அணிந்தனர்.
அப்பொழுது, மூவருள் மூன்றா மவனாகிய நேயன் எனப்படும் தூய ஆவியும்
பெருந்தவத்தோனாகிய சூசைக்கு ஒளி முடி சூட்டினான்.

     'கோத்தன' என்பது, எதுகைப் பொருட்டு, 'கோர்த்தன' என நின்றது.
"பிதா சுதன் இஸ்பிரீத்துச் சாந்து என்னும் மூவரும் வேறுபாடின்றி ஒரு
மெய்க்கடவுளாகையில், செய்யுந் தொழில் ஒன்றாயினும், இங்கே நாம்
உணருந்தன்மையைப் பற்றி, பொருளும் தெளிவது வேண்டி, வேறுபட
விரித்துரைத்தான் என்க" என்பது பழைய உரை அடிக்குறிப்பு"

 
               31
புனைந்தமா மகுடம் பொழியொளி பெருகிப்
     பொற்பதம் பாய்ந்துறப் போற்றிச்
சுனைந்தபா வுவமை நாணமிக் குவகை
     சுவைத்தவன் றுதித்துமுன் நிற்ப
வினைந்தமா மகன திருக்கையி னருகே
     யிலங்குமீன் மணியொடு நிரைத்து
வனைந்தவா சனத்திற் பொலிந்துற விறையோன்
     வளன்றனை யிருத்தியே யுரைத்தான்.
 
புனைந்த மா மகுடம் பொழி ஒளி பெருகி, பொற்பதம் பாய்ந்து
                         உறப் போற்றி,
சுனைந்த பா உவமை நாண, மிக்கு உவகை சுவைத்து, அவன்
                         துதித்து முன் நிற்ப,
இனைந்த மா மகனது இருக்கையின் அருகே, இலங்கு மீன்
                         மணியொடு நிரைத்து
வனைந்த ஆசனத்தில் பொலிந்து உற, இறையோன், வளன்
                         தனை இருத்தியே உரைத்தான் :

     தான் அணிந்திருந்த சிறந்த முடியினின்று பொழியும் ஒளி கலந்து
பெருகி, ஆண்டவனின் பொன்னடிகளில் பாய்ந்து சேருமாறு அவன்
வணங்கிப் போற்றி, கற்பனை சுரந்த செய்யுளிற் கண்ட உவமைகளெல்லாம்
நாணுமாறு மிக்க மகிழ்ச்சியைச் சுவைத்து, துதித்த வண்ணம் முன்னே
நின்றான். தந்தையாகிய ஆண்டவன், சூசை தனக்காகக் கொண்ட