பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 812

     இவன், அரிய தயவைச் செய்கையில், தாயே ஒப்பாகுமாறு.
யாவருக்கும் ஒப்பச் செய்வான்; நீங்காத நோய் வந்து சேரின் தான்
மருந்துக்கு ஒப்பாவான்; நுழையும் பேய் வந்து புகுந்தால், அரணின்
இறுக்கத்திற்கு ஒப்பாவான்; உயிர் வானுலகம் சென்று சேர, விடாத துணையாய் அமைவான்.

 
                  46
தாக்கி வெம்பகை தந்தச வத்தையிவ
னோக்கி நண்பகல் முன்னிரு ணூறுவபோற்
போக்கி யம்புவி பூத்தன புன்கணெலா
நீக்கி யின்பநி ழற்கொடி யாற்பரிவான்.
 

தாக்கி வெம் பகை தந்த சவத்தை இவன்
நோக்கி, நண் பகல் முன் இருள் நூறுவ போல்
போக்கி, அம் புவி பூத்தன புன்கண் எலாம்
நீக்கி, இன்ப நிழல் கொடியால் பரிவான்.


     மனிதரைத் தாக்கிக் கொடிய பகை விளைவித்த பேயை இவன் தன்
கண்ணால் நோக்குவதன் மூலமே, நடுப் பகலின் முன் இருள் அழிவது
போல் போக்கி, அழகிய இவ்வுலகில் வந்து தோன்றிய துன்பமெல்லாம்
நீக்கி, இன்ப நிழல் தரும் தன் மலர்க் கொடியால் காப்பான்.

 
                  47
நொந்தா லாதர வாமுறு நோயொழியா
வந்தா னாளொழி வன்றும ருங்கிலு றீஇச்
செந்தா ரானிழல் செய்துவ ழித்துணையாய்க்
கந்தா வான்கதி யின்கரை யேற்றுவனால்.
 
நொந்தால், ஆதரவு ஆம்; உறு நோய் ஒழியா
வந்தால், நாள் ஒளிவு அன்று மருங்கில் உறீஇ,
செந்தாரால் நிழல் செய்து, வழித் துணையாய்,
கந்தா வான் கதியின் கரை ஏற்றுவன் ஆல்.

     மக்கள் துன்பங்களால் நொந்தால், இவன் ஆதரவு ஆவான்;
உற்றநோய் ஒழியாத நிலைமை வந்தால், நாளெல்லாம் ஒழியாமல் அருகில்
இருந்து, தன் செவ்விய மலர்க் கொடியால் நிழல் செய்து, வழித் துணையாய்
வந்து, பற்றுக்கோடாம் மோட்ச கதியாகிய கரையில் ஏற்றி விடுவான்.

     'உற்று' என்பது 'உறீஇ' எனச் சொல்லிசை அளபெடை ஆயிற்று.