பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 813

                      48
பின்றா தோர்நசை யாற்பெய ராதணுகிக்
குன்றா தோரருள் கொள்ளிவ னம்பினருட்
பொன்றா தோர்துயர் பூத்தொழி யாமெலிவி
னின்றா ரோரொரு வர்நில மீதுளரோ.
 
பின்றாத ஓர் நசையால் பெயரால் அணுகி,
குன்றாது ஓர் அருள் கொள் இவன் நம்பினருள்,
பொன்றாது ஓர் துயர் பூத்து, ஒழியா மெலிவின்
நின்றார், ஓர் ஒருவர் நில மீது உளரோ?

     'நீங்காத ஓர் ஆசையோடு விலகாமல் அணுகி, குறையாததோர் அருள்
கொண்டுள்ள இவனை நம்பியவருள், அழியாத ஒரு துயரம் ஏற்பட்டு,
அதுநீங்கப் பெறாத மெலிவில் நிலை கொண்டவர், இம்மண்ணுலகின்மீது
ஒரேயொருவரேனும் உள்ளாரோ?

     'பின்றாததோர்,' 'குன்றாததோர்,' 'பொன்றாததோர்' என்பன இறுதி
அகரம் தொக்கு செய்யுளிற் கண்டவாறு நின்றன.

 
                    49
எண்ணென் றாயின திக்கிவை யாவுமுற
விண்ணின் றாரொளி விஞ்சிய மாமுடிசூழ்
மண்ணின் றாள்பல மன்னவர் மன்னவனே
கண்ணின் றாயின காதையு ரைத்திடுவாம்.
 
எண் என்று ஆயின திக்கு இவை யாவும் உற,
விண் நின்று ஆர் ஒளி விஞ்சிய மாமுடி சூழ்,
மண் நின்று ஆள் பல மன்னவர் மன்னவனே
கண் நின்று ஆயின காதை உரைத்திடுவாம்.

     எட்டென்று அமைந்த திசைகளிலெல்லாம் இவை யாவும் சூசை
துணையால் நிகழ்ந்து கொண்டிருக்க, விண்ணுலகினின்று நிறைவாய் வந்த
ஒளி மிகுந்த சிறந்த முடி அணிந்தவராய், இம்மண்ணுலகிலிருந்து ஆளும்
பல மன்னருக்கும் மன்னனாகிய ஒருவனிடத்திலிருந்து நிகழ்ந்த கதையை
மேலே தொடர்ந்து உரைப்போம்.