பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 815

     அவன், நீதியில் வழுவாது தனித் தகுதி வாய்ந்த செங்கோல்
உடையவன்; வாடாமல் தீ போன்ற தாமரை மலர் மாலையை உடையவன்;
அழியாத நிழல் தரும் வெண்கொற்றக் குடையை வேலியாகக் கொண்டவன்;
ஓடாத வலிமை வாய்ந்த சேனையைக் கடல் போற் கொண்டவன்.

 
                 52
தவர்க்குங் கடிதாந் தகவுற் றிகல்கின்
றவர்க்குங் கனிநன் றிடுமன் பியலா
னுவர்க்குங் கடல்சூ ழுலகிற் குளதா
மெவர்க்குந் தயையேந் தியதா தையனான்.
 

தவர்க்கும் கடிது ஆம் தகவு உற்று, இகல்கின் -
றவர்க்கும் கனி நன்று இடும் அன்பு இயலான்;
உவர்க்கும் கடல் சூழ் உலகிற்கு உளது ஆம்
எவர்க்கும் தயை ஏந்திய தாதை அனான்.

     தவ முனிவர்க்கும் அடைவதற்குக் கடினமான புண்ணியத் தகுதி
அடைந்து, தன்னோடு மாறுபடுகின்றவர்க்கும் கனிவோடு நன்மை செய்யும்
அன்பை இயல்பாகக் கொண்டவன்; உவருள்ள கடல் சூழ்ந்த உலகின்கண்
உள்ள யாவர்க்கும் அன்பைத் தாங்கிய தந்தை போன்றவன்.

 
                53
முயலே கடந்தான் முரணா லருடா
யியலே கடந்தா னியையன் பியலாற்
புயலே கடந்தான் புரிவான் கொடையால்
மயலே கடந்தான், மலிகாட் சியினால்.
 
முயலே கடந்தான் முரணால்; அருள் தாய்
இயலே கடந்தான், இயை அன்பு இயலால்;
புயலே கடந்தான், புரிவான் கொடையால்;
மயலே கடந்தான், மலி காட்சியினால்.

     தன் வலிமையால் போரெல்லாம் வென்றான்; பொருந்திய அன்பின்
தன்மையால், அருள் கொண்டதாயின் இயல்புக்கும் மேம்பட நின்றான்;
செய்த மிக்க கொடையால், மேகத்தையும் வென்றான்; மிக்க அறிவினால்
மயக்கமெல்லாம் கடந்து நின்றான்.