பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 816

                   54
தன்றா ளிகலோர் தொழுதாந் தகைமே
லொன்றா யுலகா ளுயர்வா னிறையோன்
முன்றான் தொழுதே வல்முடித் தலினாங்
குன்றா நிறைவேட் டுயர்கொள் கையினான்.
 
தன் தாள் இகவோர் தொழுது ஆம் தகை மேல்,
ஒன்றாய் உலகு ஆள் உயர் வான் இறையோன்
முன் தான் தொழுது, ஏவல் முடித்தலின் ஆம்
குன்றா நிறை வேட்டு, உயர் கொள்கையினான்.

     பகைவர் தன் கால்களைத் தொழுதலினால் உண்டாகும் பெருமைக்கு
மேலாக, ஒருவனாய் நின்று உலகெல்லாம் ஆளும் உயர்ந்த வானுலக
ஆண்டவன் முன் தான் தொழுது நின்று, அவனது கட்டளைகளை
நிறைவேற்றுவதனால் உண்டாகும் குறைவற்ற மன நிறைவையே பெரிதாக
விரும்பி, அதனால் உயர்வு காணும் கொள்கை உடையவன்.

 
                55
அனையா னவியா தவருத் தியெழீஇ
நனையார் கொடியோ னைநயந் தணுகி
வனையா வழிபா டுவனைந் துதொழப்
புனையா வுயர்பா டுபுனைந் தனனால்.
 
அனையான் அவியாத அருத்தி எழீஇ,
நனை ஆர் கொடியோனை நயந்து அணுகி,
வனையா வழிபாடு வனைந்து தொழ,
புனையா உயர் பாடு புனைந்தனன் ஆல்.

     அத்தகையோன், கெடாத அன்பு மிகுந்து, மலர் நிறைந்த கொடியைக்
கொண்ட சூசையை விருப்பத்தோடு அணுகி, எவரும் செய்யாத வழிபாடு
தான் செய்து தொழுதமையால், எவரும் அடையாத உயர் பெருமையைத்
தான் அடைந்தான்.

     'எழுந்து' என்பது 'எழீஇ' எனச் சொல்லிசை அளபெடை ஆயிற்று.

 
                  56
தண்ணங் கொடிதந் தநிழற் கணுகும்
வண்ணங் கொடுவாய்ந் தவளங் கொடுசூழ்
தெண்ணங் கடல் சேர்ந் தசெகத் தொருவ
னெண்ணந் தவிர்மாட் சியையேந் தினனால்.