பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 817

தண் அம் கொடி தந்த நிழற்கு அணுகும்
வண்ணம் கொடு, வாய்ந்த வளம் கொடு, சூழ்
தெண் அம் கடல் சேர்ந்த செகத்து, ஒருவன்
எண்ணம் தவிர் மாட்சியை ஏந்தினன் ஆல்.


     சூசையின் குளிர்ந்த அழகிய மலர்க் கொடி நிழலைத் தான் அணுகும்
தன்மைக்கு அளவாக, பொருந்திய வளங்களை அடைந்து சூழ்ந்த தெளிந்த
அழகிய கடல் சார்ந்த இவ்வுலகத்தில், ஒருவனின் சிந்தனையையும் கடந்த
மாட்சியெல்லாம் பொருந்தி நின்றான்.

 
              57
உற்றா னிறைசீர் வளமுற் றபகை
யிற்றா னுயிரீ னுறவெய் தியநோ
யற்றா னெடிதா வியசந் ததியைப்
பெற்றான் விரிபூ நிழல்பெற் றமையால்.
 
உற்றான் நிறை சீர் வளம்; உற்ற பகை
இற்றான்; உயிர் ஈறு உற எய்திய நோய்
அற்றான்; நெடிது ஆவிய சந்ததியைப்
பெற்றான், விரி பூ நிழல் பெற்றமையால்.

     சூசையின் கொடியில் விரிந்த மலரின் நிழலைத் துணையாகப்
பெற்றிருந்தமையால், நிறைந்த செல்வ வளமெல்லாம் அடைந்தான்; உற்ற
பகையெல்லாம் கெடப் பெற்றான்; உயிருக்கு இறுதியாக வந்த நோய் எதுவும்
அற்றான்; நெடுங்காலம் விரும்பித் தேடிய சந்ததியையும் பெற்றான்.

     'அவாயிய' என்பது முதல் நீண்டு இடையில் குறைந்து நின்றது.

 
                58
நெஞ்சிற் றகவிற் றிழிவார் நிகரா
ரெஞ்சித் தகுபோர் வெலவீ டிலதால்
வஞ்சித் துவெல்வா மெனவந் தொருநாள்
நஞ்சிட் டுயிரீ றிடநா டினரால்.