பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 818

நெஞ்சில் தகவு இற்று, இழிவு ஆர் நிகரார்
எஞ்சி, தகு போர் வெல ஈடு இலதால்,
வஞ்சித்து வெல்வாம் என வந்து, ஒரு நாள்
நஞ்சு இட்டு உயிர் ஈறு இட நாடினர் ஆல்.


     தம் நெஞ்சில் பெருமை குலைந்து, இழிவு நிறைந்த பகைவர் தளர்ந்து,
தகுந்த போரில் அவனை வெல்லத் தமக்கு வலிமை இல்லாமையால்,
வஞ்சித்து அவனை வெல்வோமென்று வந்து, ஒரு நாள் நஞ்சு இட்டு அவன்
உயிரை மாய்க்க வழி தேடினர்.

 
                 59
ஈண்டாங் குதவத் தனியெய் திவளன்
வேண்டார் வினைமா யைவிளம் பியதைத்
தீண்டா தெனவெண் டிசைகாத் துவழா
தாண்டா னுயிரன் பொடுகாத் தனனால்.
 

ஈண்டு, ஆங்கு உதவத் தனி எய்தி, வளன்,
வேண்டார் வினை மாயை விளம்பி, அதைத்
தீண்டாது என, எண் திசை காத்து வழாது
ஆண்டான் உயிர், அன்பொடு காத்தனன் ஆல்.


     இந்நிலையில், சூசை, அவனுக்கு உதவவென்று தனிமுறையில் அங்கே
காட்சியில் வந்து தோன்றி, பகைவர்தம் வஞ்சகச் செயலை அவனுக்குச்
சொல்லி, அதனைத் தொடாதிருக்க எச்சரித்து, எட்டுத் திசையையும்
பாதுகாத்து நீதி தவறாது ஆண்ட அம்மன்னன் உயிரை அன்போடு
காத்தான்.

                 அரசரைக் கூட்டுதல்

 
                 60
மைமா றியவன் புவலித் தவளன்
மெய்மா லுயிர்காத் தவினைக் கினியோர்
கைமா றிடுதன் மைகணித் தனனால்
பொய்மா றியமாண் புயர்பூ பதியே.

       மை மாறிய அன்பு வலித்த வளன்
       மெய் மாறு உயிர் காத்த வினைக்கு இனி ஓர்
       கைமாறு இடு தன்மை கணித்தனன் ஆல்,
       பொய் மாறிய மாண்பு உயர் பூபதியே.