பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 821

     மலையுச்சியில் நிறைந்த மேகங்கள் முழங்கின கோடைப் பருவம்
போல், பகைவர் வந்து தொழும் அரச முரசின் குரல் எழுதலால், கூடுகளில்
நிறைந்து கிடந்த பறவைக் கூட்டம் அஞ்சிப் பறந்தோட, அங்கு வந்து கூடி
நிறைந்த படையால் நிலம் நெளிந்து கூசினது.

 
                65
புண்கீ றினவே லினர்சூழ் பொதுள
மண்கீ றினவல் லுருடேர் கடிரள்
விண்கீ றினவெண் கொடியுங் குடையுங்
கண்கீ றினபற் படைகா லொளியே.
 
புண் கீறின வேலினர் சூழ் பொதுள,
மண் கீறின, பல் உருள் தேர்கள் திரள்;
விண் கீறின, வெண் கொடியும் குடையும்;
கண் கீறின, பல் படை கால் ஒளியே.

     பகைவர் மார்பைப் புண்ணாய்க் கிழித்த வேல்வீரர் தம்மைச் சுற்றிலும்
செறிந்து வர, வலிய சக்கரம் பூட்டிய தேர்க் கூட்டங்கள் நிலத்தைக்
கிழித்துச் சென்றன; வெண்கொடியும் குடையும் மேகங்களைக் கிழித்தன; பல
படைக் கருவிகளும் வெளிப்படுத்தும் பல வகை ஒளிகள்
பார்ப்பவர்கண்களைக் கிழித்தன.

 
                     66
நீரேந் தியநித் திலநீண் குடையுஞ்
சீரேந் தியசெய்ப் பவளக் குடையு
நேரேந் தியநீ லமணிக் குடையு
மேரேந் தியநல் லிருளேந் தினவே.
 
நீர் ஏந்திய நித்தல நீண் குடையும்,
சீர் ஏந்திய செய்ப் பவளக் குடையும்,
நேர் ஏந்திய நீல மணிக் குடையும்,
ஏர் ஏந்திய நல் இருள் ஏந்தினவே.

     கடல் நீர் தாங்கித் தந்த முத்துமாலை தொங்கும் உயர்ந்த
குடைகளும், அழகு தாங்கிய செந்நிறப் பவளமாலை தொங்கும் குடைகளும்,
நேரே ஏந்திப் பிடித்த நீலமணி தொங்கும் குடைகளும் சேர்ந்து, அழகு
தாங்கிய நல்ல நிழலைத் தந்தன.