பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 823

பரி பூட்டிய தேர் பல ஏறு அரசர்,
கரி பூட்டிய தேர் கடிது ஓட்டு அரசர்,
எரி பூட்டிய தேர் மிசை எய்து அரசர்,
அரி பூட்டிய தேர் அரசு அண்டினர் ஆல்.

     குதிரை பூட்டிய தேர் பலவற்றில் ஏறி வந்த அரசரும், யானை பூட்டிய
தேரை விரைவாக ஓட்டி வந்த அரசரும், நெருப்பையே பூட்டியது போன்ற
குதிரைகள் பூட்டிய தேரில் வந்தடைந்த அரசரும் ஒன்றுகூடி, சிங்கம்
பூட்டிய தேரைக் கொண்ட அவ்வரசனை அண்டினர்.

 
               70
பொங்கார் கலிமேற் பொலிவெஞ் சுடர்போ
லங்கா ரரசர் கடல்மீ தவிரச்
சிங்கா சனமே லொருசிங் கமென
மங்கா வொளிமன் னனெழுந் தனனே.
 
பொங்கு ஆர்கலி மேல் பொலி வெஞ்சுடர் போல்,
அங்கு ஆர் அரசர் கடல் மீது அவிர,
சிங்காசன மேல் ஒரு சிங்கம் என,
மங்கா ஒளி மன்னன், எழுந்தனனே.

     பொங்கும் கடல் மீது பொலிவுடன் விளங்கும் ஞாயிறு போல், அங்குக்
கூடியுள்ள அரசரென்னும் கடல்மீது விளங்கிய வண்ணம், குறையாத ஒளி
கொண்ட அம்மன்னன், அரியணையில் அமர்ந்த ஒரு சிங்கம் போல்
எழுந்தருளினான்.

 
                  71
விண்டிக் கில்விளங் கியவெஞ் சுடரை
யண்டிக் கிளர்மீ னடியேத் துவபோன்
மண்டிக் கிலெலா முடிமன் னவர்வந்
தெண்டிக் கிலிரா யனையேத் தினரே.
 

விண் திக்கில் விளங்கிய வெஞ்சுடரை
அண்டி, கிளர் மீன் அடி ஏத்துவ போல்,
மண் திக்கில் எலா முடி மன்னவர் வந்து,
எண் திக்கில் இராயனை ஏத்தினரே.