பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 829

ஆள்வோனாகிய சூசை, இங்கும் வந்து எம்மை ஆளுதல் நன்றாயினும்,
மலர்ந்த மலர்க்கொடியை உடையவனாகிய அச்சூசை ஏவும் பணிவிடையை
நீயே ஏற்று நடத்தித் தந்து, எம்மைத் தாக்கிய குறையையும் தீர்த்து
ஆள்வது தக்கதாகும்" என்று கூறி, மகிழ்ச்சியோடு அதற்கு இசைந்தனர்.

 
                      82
கோமுர சரசன் வீர குன்றனை முகத்து நோக்கி
மாமுர சொழிப்பச் சொல்லும் வளன்முடி பத்தா நாளிற்
பூமுர சார்ப்பச் சூடப் பொற்புறி நகரம் பூண
வேமுர சறைவி யென்றான் விரைந்தவன் றொழுது
போனான்.
 
கோ முரசு அரசன், வீரகுன்றனை முகத்து நோக்கி,
மாமுரசு ஒழிப்பச் சொல்லும் : "வளன் முடி பத்தாம் நாளில்
பூ முரசு ஆர்ப்பச் சூட, பொற்பு உறி நகரம் பூண.
வே முரசு அறைவி" என்றான். விரைந்து அவன் தொழுது போனான்.

     அரசு முரசுக்குரிய அம்மன்னன், வீரகுன்றன் என்பவனை முகத்தில்
பார்த்து, பெரிய முரசின் ஒலியையும் ஒழிக்கத் தக்க பெருங் குரலிற்
சொல்வானாய், "அழகிய முரசு முழங்கப் பத்தாம் நாளில் சூசை முடிசூடும்
பொருட்டு, அழகுற இந்நகரை அழகு செய்யுமாறு முரசறைந்து தெரிவிப்பாய்"
என்றான். அவன் மன்னனைத் தொழுது விரைந்து போனான்.

 
                      83
வார்பிணி முரசம் யானை வளரெருத் தேற்றிப் பைம்பொற்
றார்பிணி மார்பன் வான்மேற் றவழ்கொடி மனைமூ தூரிற்
கார்பிணி வரைமேன் மின்னிக் கதித்திடி முழங்கி னாற்போற்
பார்பிணி யொழிய வோதை படர்முர சறைவித் தானே.
 

வார் பிணி முரசம் யானை வளர் எருத்து ஏற்றி, பைம் பொன்
தார் பிணி மார்பன் வான் மேல் தவுழ் கொடி மனை மூதூரில்,
கார் பிணி வரை மேல் மின்னிக் கதித்து இடி முழங்கினாற் போல்,
பார் பிணி ஒழிய, ஓதை படர் முரசு அறைவித்தானே!