பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 830

     அவ் வீரகுன்றன், வார் கட்டிய முரசத்தை யானையின் உயர்ந்த
பிடரிமேல் ஏற்றி வைத்து, பசும் பொன்னாலாகிய மாலை அணிந்த மார்பைக்
கொண்ட மன்னனின் வான் மீது தவழும் கொடி தாங்கிய அரண்மனை
அமைந்த பழம்பதியில், மேகஞ் சூழ்ந்த மலைமேல் மின்னி விரைந்து இடி
முழங்கினாற் போல், இவ்வுலகின் துன்ப நோய்கள் ஒழியுமாறு, ஓசை பரவும்
முரசை அறைவித்து, பின்வருமாறு தெரிவித்தான் :

 
                      84
கேண்மினே கேண்மி னின்பங் கிளைத்தசொற் கனியக்
                                    கேண்மின் வாண்மினே
பசிநோய் வஞ்ச மறப்பகை யொழிய வாண்மின் பூண்மினே
வியல்வான் வேந்தன் புவிமிசை முடியைச் சூடல் பேண்மினே
நகர மெங்கும் பெருநகை அணிமின் ஈண்டே.
 

"கேண்மினே; கேண்மின்; இன்பம் கிளைத்த சொல் கனியக்
                                       கேண்மின்!
வாண்மினே; பசி நோய் வஞ்சம் மறப் பகை ஒழிய வாண்மின்!
பூண்மினே! வியல் வான் வேந்தன் புவி மிசை முடியைச் சூடல்
பேண்மினே! நகரம் எங்கும் பெரு நகை அணிமின் ஈண்டே!


      கேளுங்கள்; கேளுங்கள், இன்பம் மிகுந்த இச் சொல்லைக்
கனிவோடு கேளுங்கள்! வாழ்வு பெறுங்கள்; பசியும் நோயும் வஞ்சகமும் தீய
பகையும் ஒழிய வாழுங்கள்! அணிகலன்களைப் பூணுங்கள்! பெரிய வானுலக
வேந்தனாகிய சூசை இவ்வுலகிலும் முடிசூடிக் கொள்ளுதலைப் பேணுங்கள்!
இங்கு நகரமெங்கும் பெரு மகிழ்ச்சியோடு அழகு செய்யுங்கள்!

     'வாழ்மின்' என்பது எதுகைப் பொருட்டு, 'வாண்மின்' எனத் திரிந்து
நின்றது.

 
                    85
வானர சாகி லிப்பார் வானுல காகப் பூண்மின்
பானர சாகிற் கங்குல் பட்டொளி பரவு மன்றோ
கோனர தேவ னேவற் கொண்டமா வரத்தோ னிங்கண்
டானர பதியா யொவ்வாத் தயைதளிர்த் தெம்மை
யாள்வான்.