பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 832

தார் புனை முரசின் பேழ் வாய் தழங்கு குரல் கேட்ட காலை,
கார் புனை மனை மூது ஊரில், கதத்த காற்று அதிர்ந்து வீச
நீர் புனை புணரி பொங்கி நெருங்கு அலை மயங்கிற்று என்ன,
நார் புனை உவப்பில், யாரும், நடந்து இரிந்து எதிர்ந்து ஓயாரே.


     மாலை அணிந்த முரசின் பெரிய வாயினின்று ஒலித்த குரலைக்
கேட்டபோது, சினந்த காற்று அதிர்ந்து வீசியதனால் நீர் நிறைந்த கடல்
பொங்கி நெருங்கிய அலைகள் ஒன்றோடொன்று கலந்தன போல், மேகம்
சூழ்ந்த மாளிகைகள் நிறைந்த அப்பழமையான ஊரிலுள்ள யாவரும், அன்பு
தோய்ந்த மகிழ்ச்சியோடு நடந்தும் திரிந்தும் எதிர் கொண்டும் ஒயாராயினர்.

     'தழங்கு குரல்' என்பது 'தழங்குரல்' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.

 
                   88
கன்னியங் குமரி வாழை கமுகொடு மயங்க நாட்டிச்
சென்னியந் தளிரும் பன்னஞ் சேர்ந்ததீங் கனியும் பூவும்
பின்னியங் கிடங்க டோறும் பெருகமொய்த் தெவணு நாற
மின்னியந் நகர்வண் டார்க்கும் விரிமலர்க் காவிற் றாமே.
 
கன்னி அம் குமரி வாழை கமுகொடு மயங்க நாட்டி,
சென்னி அம் தளிரும் பன்னம் சேர்ந்த தீம் கனியும் பூவும்
பின்னி அங்கு இடங்கள் தோறும் பெருக மொய்த்து எவணும்
நாற,
மின்னி அந்நகர், வண்டு ஆர்க்கும் விரி மலர்க் காவிற்று ஆமே.

     குலை ஈனாத அழகிய இளம் வாழைகளைக் கமுகுகளோடு கலந்து
நாட்டி, மரத்து உச்சியில் தோன்றும் அழகிய தளிரும் இலையோடு சேர்ந்த
இனிய கனிகளும் பூவும் பின்னிக் கலந்து அங்கு இடந்தோறும் பெருகத்
திரண்டு எங்கும் மணம் பரப்ப, அந்நகர் மின்னி, வண்டுகள் ஒலிக்கும்
விரிந்த மலர்ச் சோலையின் தன்மையது ஆகும்.

 
                        89
நெட்டொளி மாடத் துச்சி நேரிடை விடாது நீலப்
பட்டொளிப் பந்தர் பாய்த்திப் பத்தியிற் பயிற்றிக் கோத்த
கட்டொளி மணிகணாறக் கதிர்ப்பகற் கஞ்சா மின்மீன்
விட்டொளி பூத்த வான்போல் வியென்னமா நகர மன்றே.