பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 836

பண் நிற வாய் வண்டு ஆர்க்கும் பனிப் பூ நாற, படர் மழை மின்
தெண் நிற வாய்ப் பூம் புகையுள் மணி வில் வீசும் தெரு எல்லாம்
விண் நிற வாய் மலர்ந்து, இவ்வாறு ஒன்பான் நாளும் விழா அணி
                                         கண்டு,
ஒண் நிற வாய் இரவி எழீஇ, விழைந்த நல் நாள் உதித்ததுவே.


     வீணை போன்ற வாயைக் கொண்ட வண்டுகள் முழங்கும் குளிர்ந்த
தாமரைப் பூக்கள் மணம் வீசவும், படர்ந்த மேகத்து மின்னல் போல்
தெளிந்த வெண்ணிறமுள்ள மெல்லிய மணப் புகையினுள்ளே மணிகள்
கிடந்து ஒளி வீசும் தெருக்களெல்லாம் விண்ணின் தன்மை கொண்டு
மலர்ந்து தோன்றவும், இவ்வாறு ஒன்பது நாட்களும் விழாச் சிறப்பு முடித்து,
ஒளி விளக்க கொண்ட கதிரவன் எழவும், விரும்பி எதிர்பார்த்திருந்த நல்ல
நாள் வந்துதித்தது.

 
                       95
பொற்பரப்பிற் பவளத்தூ ணிறுத்தி மற்றோர் புறம்படிகக்
கற்பரப்பிச் சுவரேற்றிக் கவிழ்ந்த வான்போற் கதிர்மணியின்
னற்பரப்பிற் சிரங்கூட்டி நிலைக்கண்ணாடி நகநிரைத்து
விற்பரப்பிக் கதிர்ப்பதிபோல் வேய்ந்த தாங்கோர் மண்டபமே.
 
பொன் பரப்பில் பவளத் தூண் நிறுத்தி, மற்று ஓர் புறம் படிகக்
கல் பரப்பிச் சுவர் ஏற்றி, கவிழ்ந்த வான் போல் கதிர் மணியின்
நல் பரப்பில் சிரம் கூட்டி, நிலைக் கண்ணாடி நக நிரைத்து
வில் பரப்பி, கதிர்ப் பதி போல், வேய்ந்தது ஆங்கு ஓர் மண்டபமே.

     பொன் பரப்பிய தளத்தில் பவளத் தூண்களை நிறுத்தி, மற்றொரு
பக்கம் பளிங்குக் கல் பரப்பிச் சுவரெழுப்பி, கவிந்த வானம் போல் ஒளி
பொருந்திய மணிகள் நன்கு பரந்த தன்மையாய்ச் சிகரம் கூட்டி, நிலைக்
கண்ணாடிகள் ஒளிதர வரிசையாய் அமைத்து, எங்கும் ஒளி பரப்பி,
கதிர்களுக்கெல்லாம் தலைவனாகிய கதிரவன் போல், அங்கு ஒரு
மண்டபம் அழகுடன் அமைந்தது.