பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 837

                        96
கலையீன்ற முறையொல்கா தங்க ணாப்பன் கதிர்ப்பொன்னா
லுலையீன்ற வரிமுந்நான் கெருத்திற் றாங்க வொளியல்கா
மலையீன்ற வினமணியாற் குறட்டை யேற்றி வானோர்சேர்
நிலையீன்ற வெழிற்காட்ட நிமிர்ந்த தோர்சிங் காசனமே.
 
கலை ஈன்ற முறை ஒல்காது, அங்கண் நாப்பண், கதிர்ப் பொன்னால்
உலை ஈன்ற அரிமுந் நான்கு எருத்தின் தாங்க, ஒளி அல்கா
மலை ஈன்ற இன மணியால் குறட்டை ஏற்றி, வானோர் சேர்
நிலை ஈன்ற எழில் காட்ட, நிமிர்ந்தது ஓர் சிங்காசனமே.

     கலை நூல் காட்டிய முறை தவறாமல், அங்கு அதன் நடுவே, ஒளி
பொருந்திய பொன்னால் உலையிலிட்டு உருக்கி அடித்த சிங்கங்கள்
பன்னிரண்டும் தம் கழுத்தில் தாங்கிய வண்ணம், மலையிற் கிடைத்த
பலவகை மணிகளால் இருக்கைக் குறடு ஏற்றி வைத்து, வானவர் வந்து
அமர்வதற்கு ஏற்ற நிலை கொண்ட அழகு காட்டி, ஒர் அரியனை எழுந்தது.

 
                    97
கண்கனிய மின்றெழித்துக் கதிரால் வீக்கிப் பானுயிராய்
மண்கனியக் கனிவானோர் களிப்பிற் செய்த வடிவாகப்
புண்கனிய மருந்தன்னோ னுருவ மங்கண் பொலிந்துயிர்போல்
விண்கனிய வெண் கனியத் திருவில் வீசி வேய்ந்ததன்றே.
 
கண் கனிய மின் தெளித்து, கதிரால் வீக்கி, பான் உயிராய்,
மண் கனிய, கனி வானோர் களிப்பின் செய்த வடிவாக,
புண் கனிய மருந்து அன்னோன் உருவம் அங்கண் பொலிந்து,
                                     உயிர் போல்,
விண் கனிய, எண் கனியத் திரு வில் வீசி வேய்ந்தது அன்றே.

     கண் கூசாதிருக்க மின்னலைத் தெளித்து, கதிரொளியால் கட்டி,
பகலவனை உயிராய் உள்ளே கொண்டு, இம்மண்ணுலகம் மகிழுமாறு இன்பம்
கொண்டவானோர் களிப்போடு செய்த உருவம் போல, புண்ணை இனிதாய்
ஆற்றும் மருந்து போன்றவனாகிய சூசையின் திருவுருவம் அக்குறட்டின்மேல்
பொலிந்து தோன்றி, உயிருள்ளது போல், விண்ணுலகம் கண்டு இன்பம்
கொள்ளவும் எண்ணுவார் எண்ணம் கனியவும் அழகிய ஒளி வீசி அமைந்து
நின்றது