பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 839

                    100
சென்னாக முழக்கொடுபற் பறைக ளார்ப்பத் திருமணியாழ்
புன்னாக வண்டிசையாற் புகழ்ந்து பாடத் தொழப்பொருநர்
பொன்னாக மணிமுகிற்பூம் புகைசூழ் தேக்கு மண்டபத்தின்
மின்னாக மணிமார்பன் மிளிர்தா ளேத்தி விரைந்துற்றான்.
 

செல் நாக முழக் கொடு பல் பறைகள் ஆர்ப்ப, திரு மணி யாழ்
புன்னாக வண்டு இசையால் புகழ்ந்து பாட, தொழப் பொருநர்,
பொன் நாகம் அணி முகில் பூம் புகை சூழ் தேக்கு மண்டபத்தில்,
மின் நாக மணி மார்பன், மிளிர் தாள் ஏத்தி விரைந்து உற்றான்.


     மேகத்தின் முழக்கம் போல் பல பறைகள் ஒலிக்கவும், அழகிய
மணிகள் பதித்த யாழ்கள் புன்னை மரத்து வண்டின் இசைபோல் புகழ்ந்து
பாடவும், ஏனைய அரசர் தொழவும், பொன் மலை தன்மீது அணிந்து
கொண்ட வெண்மேகம் போல் மெல்லிய மணப் புகை சுற்றிலும் கவிந்து
தேங்கிய மண்டபத்தில், மின்னும் மலை போன்ற மணிமாலை அணிந்த
மார்பு கொண்ட மன்னவன், சூசையின் ஒளி விளங்கும் அடிகளைப்
போற்றிய வண்ணம் விரைந்து வந்து சேர்ந்தான்.

 
                            101
அலைவரம்பற் றோடுவபோ னகர மெல்லா மடர்ந்துறீஇவா
னிலைவரம்பற் றும்பர்மிசைப் பல்லாண் டோதி நிற்பமறைக்
கலைவரம்பற் றுணர்ந்தோர்தங் கரும மாற்றி மாதவற்கே
விலைவரம்பற் றமைத்தமுடி வேந்தர் வேந்தன் றொழுதணிந்தான்.
 
அலை வரம்பு அற்று ஓடுவ போல், நகரம் எல்லாம் அடர்ந்து
                                          உறீஇவான்
நிலை வரம்பு அற்று உம்பர் மிசைப் பல்லாண்டு ஓதி நிற்ப,
                                          மறைக்
கலை வரம்பு அற்று உணர்ந்தோர் தம் கருமம் ஆற்றி, மாதவற்கே,
விலை வரம்பு அற்று அமைத்த முடி, வேந்தர் வேந்தன், தொழுது
                                          அணிந்தான்.