பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 843

                      105
குழலெ ழுந்தவிமி ழிசையி சைந்தகுர லிணையில
     குயிலொ ழிந்தவயி ரியர்க னிந்ததுதி யிணையில
கழலெ ழுந்தவணி நகந யந்தநட மிணையில
     கடல்பு ரண்டதென மறுக டர்ந்தகுழு விணையில
வழலெ ழுந்தமணி குளிர விண்டவொளி யிணையில
     வருள லர்ந்தமுக நகமு யன்றகொடை யிணையில
நிழலெ ழுந்தநிலை நிறைய மைந்தவமு திணையில
     நிழலெ ழுந்தகொடி வளனு மிந்தவர மிணையிலால்.
 
குழல் எழுந்த இமிழ் இசை இசைந்த குரல் இணை இல,
     குயில் ஒழிந்த வயிரியர் கனிந்த துதி இணை இல,
கழல் எழுந்த அணி நக நயந்த நடம் இணை இல.
     கடல் புரண்டது என மறுகு அடர்ந்த குழு இணை இல.
அழல் எழுந்த மணி குளிர விண்ட ஒளி அணை இல
     அருள் அலர்ந்த முகம் நக முயன்ற கொடை இணை இல.
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல.
     நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல் ஆல்.

     புல்லாங்குழலில் எழுந்த இனிய இசையோடு இசைந்து பாடிய குரல்
இசைக்கும் ஒப்பு இல்லை. குயிலிசையையும் ஒழித்த தன்மையாய்ப்
புகழ்பாடுவோர். கனிந்து பாடிய துதிக்கும் ஒப்பு இல்லை. காலில் அணிந்த
அணிகலன்கள் குலுங்கி ஒலிக்க நயந்து ஆடிய நடனத்துக்கும் ஒப்பு
இல்லை. கடல் கரை புரண்டது போலத் தெருவெல்லாம் நெருங்கி நின்ற
கூட்டத்துக்கும் ஒப்பு இல்லை. நெருப்பொளி எழுந்த செந்நிறப்பவள
மணிகள் விடுத்த ஒளிக்கும் ஒப்பு இல்லை. அருள் கனிந்த முகத்தோடு
சிரித்துக் கொண்டு வழங்கிய கொடைக்கும் ஒப்பு இல்லை. நிழல்
பொருந்திய இடமெல்லாம் நிறைவாகப் படைத்து வழங்கிய உணவு
வகைகளுக்கும் ஒப்பு இல்லை. நிழல் தந்து எழுந்த மலர்க் கொடியைக்
கொண்டுள்ள சூசை பொழிந்த வரங்களுக்கும் ஒப்பே இல்லை.

 
                       106
முகைய ணிந்தவணி மதுவு மிழ்ந்தமண மளவில
     முருகு மிழ்ந்தசுதை கலவை சிந்துரமு மளவில
புகைய ணிந்தமனை தொறுமெ ழுந்தகொடி யளவில
     பொறிநு கர்ந்தநய மனநு கர்ந்தநய மளவில