பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 846

கை விளை கொடையின் பொழுது எலாம் இனிதின் கடிந்து, வெங்கதிர்
                                        கடிந்து ஒளிப்ப,
நெய் விளை சுடர் வாய்த் திரு மணித் தீபம் நிறைந்து ஒளி மணிகளோடு
                                        எறிப்ப
மை விளை கங்குல் நுழைந்து இருள் உலகில் மல்கினது அந்நகர் அறியா
மெய் விளை ஒற்றர் உரைப்ப, ஈண்டு அரசன், "விரி மணித் தேர் எழ!"
                                        என்றான்.


     கையால் விளைவிக்கும் கொடைச் செயலில் இனிதாகப் பகற்
பொழுதெல்லாம் விரைவாகப் போக்கி, ஞாயிறு விரைந்து மறைய, நெய்யால்
விளைவிக்கும் சுடரொளியைத் தம்பாற் கொண்டுள்ள அழகிய மணி பதித்த
விளக்குகள் எங்கும் நிறைந்து ஒளியுள்ள மணிகளோடு தாமும் ஒளி
வீசியதனால், இருளை விளைவிக்கும் இரவு வந்து, அதனால் உலகத்தில்
இருள் நிறைந்ததனை அந்நகரம் அறியாமல் பகலென்றே மயங்க,
உண்மையை உள்ளவாறு கண்டுரைக்கும் ஒற்றர் அதுவே தக்க சமயமென்று
சொல்லி நிற்க, இங்கு இருந்த அரசன், 'ஒளி விரிக்கும் மணிகள் பதித்த
தேர் எழுந்தருள்வதாக!' என்றான்.

 
              109
அடியென வெள்ளி யுருளைபொன் னச்சிட்
     டவிர்ந்தெழு மரகத மலையிற்
கொடியென வெண்முத் தாரமே தவழக்
     குடியென மணியுருக் கிளம்பக்
கடியெனப் பசும்பொற் பரப்பில்வம் பலராய்க்
     கதிர்மணி பூப்பமே லொளிவான்
முடியெனச் சிகரம் வயிரத்தூண் டாங்க
     முனிப்பதிக் கமைத்ததோ ரிரதம்
 
அடி என வெள்ளி உருளை பொன் அச்சு இட்டு, அவிர்ந்து எழு
                                   மரகத மலையில்
கொடி என வெண் முத்து ஆரமே தவழ, குடி என மணி உருகிளப்ப
கடி எனப் பசும் பொற் பரப்பில் வம்பு அலராய்க் கதிர் மணி பூப்ப,
                                   மேல் ஒளி வான்
முடி எனச் சிகரம் வயிரத் தூண் தாங்க, முனிப் பதிக்கு அமைத்தது
                                   ஓர் இரதம்