பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 85

''பிரிந்த கன்றினை நேடிய பெற்றமோ!
எரிந்த கூழ் உயிர் என்று இயை மாரியோ!
சொரிந்த தன்மை வரத் தொகை ஈக நீ
விரிந்த நீள் நெறி வந்து எனை மேவினாய்!


      ''தொகையான வரங்களைப் பொழிந்த தன்மையால் எனக்கு ஈயும்படி
விரிந்து நீண்ட வழியெல்லாம் நடந்து கடந்து என்னை வந்தடைந்தாய்!
பிரிந்த கன்றைத் தேடி வந்த பசுவுக்கு நிகராக உன்னைச் சொல்வேனோ!
வெயிலால் கரிந்த இளம் பயிருக்கு உயிராக வந்து பொருந்திய மழைக்கு
நிகராகச் சொல்வேனோ!

 
                36
வேய்ந்த மாட்சியின் மேவரு மேன்மையால்
வாய்ந்த மாதரு ளாசிம லிந்தனை
யாய்ந்த வாய்மைக டந்தரி தாசியுட்
டோய்ந்த னீயணி சூற்கனி தானுமே.
 
''வேய்ந்த மாட்சியின் மேவரு மேன்மையால்,
வாய்ந்த மாதருள் ஆசி மலிந்தனை.
ஆய்ந்த வாய்மை கடந்து அரிது ஆசியுள்
தோய்ந்தன் நீ அணி சூல் கனி தானுமே!

      ''நீ அணிந்துள்ள மாண்புகளால் அமைந்துள்ள மேன்மையால்,
இவ்வுலகில் வந்துதித்த பெண்களுக்குள்ளே ஆசீர்வாதம் நிறைந்தவள்
ஆவாய்! நீ தரித்துள்ள கருப்பத்தின் கனியாகிய அம் மகனும் ஆய்ந்து
கண்ட உண்மைக்கெல்லாம் எட்டாத தன்மையாய் அரிதான ஆசீர்வாதம்
தோய்ந்தவன் ஆவான்!

      'மலிந்த நீ' என்பது 'மலிந்தனை' எனவும், 'தோய்ந்தன் நீ' என்பது
'தோய்ந்தனீ' எனவும் கொள்ளப்பட்டன.

 
                          37
நின்றன் வாய்மொழி என்செவி நேர்பட
வென்றன் வாயுறை யென்மக வின்புறீஇ
யின்றன் வாயென மேவியு கண்டுளத்
துன்றன் வாயரு ளாண்மையி லோங்கினான்.