பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 86

''நின்தன் வாய்மொழி என் செவி நேர் பட,
என்றன் வாய் உறை என் மகவு இன்பு உறீஇ,
மின் தன் வாய் என மேவி, உகண்டு, உளத்து
உன் தன் வாய் அருள் ஆண்மையில் ஓங்கினான்!


      ''உன் வாய்ச் சொல் நேரே என் செவியிற் பட்டதும், என் வயிற்றில்
தங்கியுள்ள என் மகன் இன்பம் அடைந்து, மின்னல் தன்னை அடைந்தது
போல் அதனை விரும்பி ஏற்று, துள்ளிக் குதித்து, தன் உள்ளத்தில் உன்
வாய்ச்சொல் அருளிய வலிமையால் எழுச்சியுற்றான்!

 
                38
நீத வாய்நெகி ழாநெறி நாயகன்
வேத வாய்மொழி யாகவி ளம்பிய
சாத வாய்மையுன் வாய்தக வுன்புகழ்
கீத வாயிலெங் குங்கிளைப் பாரென்றாள்.
 
''நீத வாய் நெகிழா நெறி நாயகன்
வேத வாய் மொழியாக விளம்பிய
சாத வாய்மை உன்வாய் தக, உன் புகழ்
கீத வாயில் எங்கும் கிளைப்பார்!'' என்றாள்.

      ''நீதியோடு உண்மையும் நெகிழாத நெறிக்குத் தலைவனாகிய
ஆண்டவன் வேத வாக்காகக் கூறி நிலைத்த உண்மை உன்பால்
நிறைவேறும் பிற்காலத்தவர் உன் புகழைப் பாடல் வாயிலாக எங்கும்
பரப்புவர்'' என்று எலிசபெத்தை வாழ்த்துரையை முடித்தாள்.

      சாதம் - சதம் என்பதன் நீட்டல் விகாரம்.

 
                 39
பட்ட செங்கதிர் மீட்டவை பானின்மேல்
விட்ட வெண்பளிங் கொத்திவள், மேவலோ
டிட்ட தன்புகழ் தன்னிறை யோன்றனை
யொட்ட மீட்டனள் கன்னியும் ஓதியே.
 
பட்ட செங்கதிர் மீட்டு அவை பானின்மேல்
விட்ட வெண் பளிங்கு ஒத்து, இவள் மேவலோடு
இட்ட தன் புகழ் தன் இறையோன்தனை
ஒட்ட மீட்டனள் கன்னியும் ஓதியே;