பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 852

     'உற்று' என்பது'உறீஇ' எனச் சொல்லிசை அளபெடை கொண்டது.

 
                      116
தான்செய்த தவஞ்செய் யரசிதோ நாமே
     தவப்பயன் பெற்றன மென்பார்
கான்செய்த கொடியோன் புனைமுடி காணக்
     கண்பெற்ற பயன்பெற்றா மென்பா
ரூன்செய்த பிறப்பி லுருவில வானோர்க்
     குயர்பயன் பெற்றனை யென்பார்
வான்செய்த வுவகை பெற்றன முன்னை
     மன்னனாப் பெற்றநா மென்பார்.
 
"தான் செய்த தவம் செய் அரசு இதோ? நாமே தவப் பயன்
                    பெற்றனம்!" என்பார்.
"கான் செய்த கொடியோன் புனைமுடி காண, கண் பெற்ற
                    பயன் பெற்றாம்!" என்பார்.
"ஊன் செய்த பிறப்பில், உருஇல வானோர்க்கு உயர் பயன்
                    பெற்றனை!" என்பார்.
"வான் செய்த உவகை பெற்றனம், உன்னை மன்னன் ஆப்
                    பெற்ற நாம்!" என்பார்.

     "இவனுக்குத் தான் செய்த தவத்தின் பயனாகக் கிட்டிய அரசோ
இது? அது எவ்வாறாயினும் அத்தவத்தின் பயனை நாமே பெற்றுள்ளோம்"!
என்பார் சிலர். "மணம் கமழும் மலர்க் கொடியை உடையவனாகிய சூசை
அரசு முடி புனையக் காணவே, கண் பெற்ற பயன் நாம் பெற்றோம்!"
என்பார் வேறு சிலர். "ஊனுடல் கொண்ட மனிதப் பிறப்பில், உருவமற்ற
வானவர்க்கும் உயர்ந்த பயனை நீயே பெற்றாய்!" என இன்னும் சிலர்
சூசையைப் போற்றுவார். "உன்னை அரசனாகப் பெற்றுள்ள யாம்,
வானுலகிற்கு உகந்த மகிழ்ச்சியே பெற்றோம்!" என்று மற்றும் சிலர்
போற்றுவார்.