பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 853

                   திருவுருவ நிலைப்பாடு

     - விளம், - விளம், - மா, கூவிளம்

 
                    117
பன்னரு முவப்பொடு பலவுங் கூறியே
பொன்னருங் கொடியினோ னிருக்கை போற்றிமுன்
மன்னரும் வியப்புற வனைந்த கோயில்வாய்
மின்னருங் கொடிஞ்சித்தேர் விளங்க நின்றதே.
 
"பன் அரும் உவப்பொடு பலவும் கூறியே,
பொன் அருங் கொடியினோன் இருக்கை போற்றி, முன்
மன்னரும் வியப்புற வனைந்த கோயில்வாய்,
மின் அருங் கொடிஞ்சித் தேர் விளங்க நின்றதே.

     சொல்லுவதற்கரிய மகிழ்ச்சியோடு இவ்வாறு பலரும் பலவும் சொல்லிப்
போற்ற, அரிய பொன்மலர்க் கொடியை உடைய சூசைக்குத் தக்க
இருப்பிடமாகத் தெரிந்து போற்றி, வந்த மன்னர்களும் வியப்புறுமாறு
முன்னே அமைத்திருந்த கோவிலின் வாயிலிடத்து, மின்னும் அரிய
மொட்டோடு கூடிய தேர் வந்து ஒளி விளங்க நிலை கொண்டது.

 
              118
செய்முறை யனைத்தையுந் திருத்தி வேதியர்
கைமுறை தொழப்பறை கறங்க யாவரு
மெய்முறைத் துதியொடு விழுந்து போற்றநேர்
நைமுறைக் கோயிலுள் ளுருவ நாற்றினார்.
 
செய் முறை அனைத்தையும் திருத்தி வேதியர்
கை முறை தொழ, பறை கறங்க, யாவரும்
மெய் முறைத் துதியொடு விழுந்து போற்ற, நேர்
நை முறைக் கோயிலுள் உருவம் நாற்றினார்.

     செய்ய வேண்டிய சடங்கு முறைகள் அனைத்தையும் குருக்கள்
திருந்தச் செய்து முறையாகத் தாமும் கை வணக்க முறையால் தொழுது
நிற்கவும், பறைகள் ஒலிக்கவும், யாவரும் வாய் வணக்க வாழ்த்தோடு
உடல் முறை வணக்கமாய்த் தரையில் விழுந்து போற்றவும்; ஒப்பெல்லாம்
நைந்து கெடத் தக்க முறையாய் அமைந்த அத் திருக்கோவிலினுள்
சூசையின் திருவுருவத்தைக் குருக்கள் மணங்கமழ நிலைப்படுத்தி வைத்தனர்.