பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 854

                       119
மிடிவினை பசிபிணி வெறுப்பு நோய்பகை
மடிவினை யடைந்தபல் லரக்கர் வண்ணமே
யடிவினை யென்றுகீழ்க் கிடத்தி யஞ்சிய
கடிவினை முகத்திடைக் காட்டி நின்றவே.
 
மிடி வினை பசி பிணி வெறுப்பு நோய் பகை,
மடி வினை அடைந்த பல் அரக்கர் வண்ணமே,
அடி வினை என்று கீழ்க் கிடத்தி, அஞ்சிய
கடி வினை முகத்திடைக் காட்டி நின்றவே.

     அங்கு வறுமையும் தீவினையும் பசியும் நோயும் வெறுப்பும் துன்பமும்
பகையும், சாவை அடைந்த பல அரக்கர் போல, சூசையின் அடிக்கீழ்த்
தீவினை போலக் கிடத்தப் பெற்று, அஞ்சி நடுங்கிய செயலைத் தம் முகத்தே
காட்டி நின்றன.

 
                  120
நான்மணி யானைகள் நவின்ற தீயவை
கான்மணி படமிதித் துயர்தங் கைதொழ
வான்மணி பூத்ததோர் மரக தக்கிரி
நீன்மணி யெருத்துயர் சுமந்து நின்றவே.
 
நால் மணி யானைகள், நவின்ற தீயவை
கால் மணி பட மிதித்து, உயர் தம் கை தொழ,
வால் மணி பூத்தது ஓர் மரகதக் கிரி
நீல் மணி எருத்து உயர் சுமந்து நின்றவே.

     நீல மணியாற் செய்த நாலு யானைகள், முன் சொல்லிய தீயவற்றைத்
தம் காலால் அழகுற மிதித்து, உயர்த்திய தம் துதிக்கைகளால் தொழுது,
வெண்ணிற வைரமணி பொருந்திய ஒரு பச்சை மலையைத் தம் நீல
மணிபோன்ற பிடரி மீது சுமந்து நின்றன. சூசையின் திருவுருவத்தை
வைரமணியாகவும், திருக்கோவிலை மரகத (பச்சை) மலையாகவும் கொள்க.