பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 856

     இவ்வுலகத்துள்ள அரசர்க்கரசனாகிய லெயுப் போல்தின் வெற்றி
விருதாகிய, அழகிய உடலும் இரு தலைகளும் கொண்ட ஆகிலப்
பறவையின் தூவி நிறைந்த உடலிற் பொருந்திய பொன் மயமான சிறகுகளின்
வலிமைக்கு மேலாக, மெய்யான மனத் தவம் கொண்ட அரசனாகிய சூசை
உயர்ந்து விளங்கினான்.

 
                      123
மட்பட வுலகெலாம் விற்ப வாய்த்தன
விட்பட மெனமணி விளங்க வோரைவில்
லுட்பட வளைத்தமா முடியொர் வானியாய்ப்
புட்படப் பறந்தவான் பொருந ரேந்தினார்.
 
மண் பட உலகு எலாம் விற்ப வாய்த்தன
விண் படம் என, மணி விளங்க, ஓர் ஐ வில்
உட் பட வளைத்த மா முடி ஓர் வானியாய்,
புள் படப் பறந்த வான் பொருநர் ஏந்தினார்.

     மண்ணுலகம் உட்படப் பிற உலகங்களெல்லாம் ஒன்றாக விற்றுப்
பெற்றுக்கொள்ள வாய்த்த வானத்தின் படம் என்பதற்கு ஒப்பாக, பல
மணிகளும் தன்பால் பதித்து விளங்கி, அடியினின்று ஓர் ஐந்து வில்லாக
உட்புறமாய் வளைத்துச் சிறந்த முடியாக மேலே ஒருங்கு கூடிய ஒரு
மேற்கட்டியாகக் கொண்டு, பறவை போல் பறந்த வண்ணமாய் அமைந்த
வானவர் படையினர் ஏந்தி நின்றனர்.

 
                   124
மின்றவழ் மணிவரை வேய்ந்த வாசன
முன்றவழ் திருவொளி முகிழ்த்தை விற்கிடைப்
பின்றவ ழணிக்கொடு வியவர் பெற்றியாற்
பொன்றவழ் பாவைகள் போற்றி நின்றவே.
 
மின் தவழ் மணி வரை வேய்ந்த ஆசன
முன் தவழ் திரு ஒளி முகிழ்த்து, ஐ வில் கிடைப்
பின் தவழ் அணிக் கொடு, வியவர் பெற்றியால்,
பொன் தவழ் பாவைகள் போற்றி நின்றவே.

     மின்னல் தவழும் மணி மலை போல் அமைந்த இருப்பிடத்தின் முன்
தம் உடலில் தவழும் அழகிய ஒளியைச் சொரிந்தும், அங்கிருந்து ஐந்து வில்
கிடக்கும் தொலைவுக்குப்பின் ஒளி தவழும் அணிகள் அணிந்து கொண்டும்,
பணிப்பெண்களின் தன்மையாக, பொன்னொளி தவழும் பாவை உருவங்கள்
கைக்கூப்பிப் போற்றிய வண்ணமாய் நின்றன.