பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 859

வானவர் வணக்கம்

- மா, - மா, - காய், - மா, - மா, - காய்

129
தண்வாய் கொடியோ னின்னணந்தன்
     றவத்தீ ருலகி னரசெய்தி
மண்வா யின்ன நிலைபெற்று
     மணிவாய்முகத்து வீற்றிருக்கப்
பண்வாய் மணிப்பூங் குரன்முரலப்
      பனிப்பூங் குரல்வாய் துதிதுவைப்ப
விண்வாய் மணப்பூம் புகைமொய்ப்ப
      விள்ளாவின்பத் தடிதொழுதார்.
தண்வாய்க் கொடியோன். இன்னணம் தன் தவத்து ஈர் உலகின்
அரசு எய்தி,
மண்வாய் இன்னநிலை பெற்று, மணிவாய் முகத்து வீற்றிருக்க,
பண்வாய் மணிப்பூங் குரல் முரல, பனிப்பூங் குரல் வாய் துதி
துவைப்ப,
விண்வாய் மணப் பூம் புகை மொய்ப்ப, விள்ளா இன்பத்து அடி தொழுதார்.

குளிர்ச்சி பொருந்திய மலர்க் கொடியைக் கொண்டுள்ள சூசை,
இவ்வாறு தன் தவ மேம்பாட்டால் விண் மண் ஆகிய இரண்டு
உலகங்களிலும் அரசு பெற்று, மண்ணுலகில் இந்தத் திருநிலைப் பாட்டு
நிலையும் பெற்று, மணி போன்ற வாயும் மலர்ந்த முகமுங் கொண்டு
வீற்றிருக்க, மக்களெல்லாம், வீணையினின்றெழும் மணி போன்ற அழகுக்
குரலால் பாடவும், குளிர்ந்த அழகிய குரலால் மக்கள் வாய் துதிகளை
முழக்கவும், மணமுள்ள அழகிய புகை வானகத்திற் சென்று திரளவும்,
நீங்காத இன்பத்தோடு அவன் அடியைத் தொழுதனர்.

'மக்களெல்லாம்' என்பது வருவிக்கப்பட்டது.

130
மன்னக் களிப்போ டிவையாகி
     வான் வாழ் வானிங் கரசுற்றா
னென்னக் காண வவ்வுலகி னிறைவர்
     மொய்த்த ரெனவானோர்