|
''மாறாத
நீதியும் வலிமையும் மிக்க ஆண்டவன் தனது ஒளி
பொருந்திய நீண்ட பெரிய கையின் வலிமையைக் காட்டி, கிளர்ந்து எழும்
தீய உணர்வினால் தமது மனத்தில் அகந்தை கருதிச் செயல் புரிவாரைச்
சிதறடித்தான்; வலிமையால் உயர்ந்து நின்றோரைத் தூளாக்கும்படியான
உயரத்தினின்று தள்ளுகின்றான்; பணிந்து நின்றவரை உயர்த்தினான்;
பசியினால் தளர்வோரை மிக்க வளங்களால் நிறைவித்தான்; செல்வம்
பெருகி வாழ்வாரை வறியோர் ஆக்குகின்றான்.
| 43 |
அண்ணத்
தலையின் முறைகடந்தே
யபிர
முதன்மூத் தோர்க்குரைத்த
வண்ணத் தருந்தன் றயையுள்ளி
வழுவா
வன்பிற் பணித்தொழும்ப
னெண்ணத் தொழுகு மிசறயலை
யிரங்கிக்
கைக்கொண் டானென்றாள்
கண்ணத் தகுதி கடந்தெனையாள்
கருணை
மிக்க வானரசாள். |
| |
''அண்ணத் தலையின்
முறை கடந்தே, அபிரம் முதல்
மூத்தோர்க்கு உரைத்த
வண்ணத்து, அரும் தன் தயை உள்ளி, வழுவா அன்பின் பணித்
தொழும்பன்
எண்ணத்து ஒழுகும் இசறயலை இரங்கிக் கைக்கொண்டான்'' என்றாள்,
கண்ணத் தகுதி கடந்து எனை ஆள் கருணை மிக்க வான் அரசாள். |
''ஆபிரகாம்
முதலாகத் தொடங்குகின்ற மூத்தோர் பரம்பரைக்கு
அறிவித்தபடியே, அடுத்து வந்த பல தலைமுறைகள் கடந்த பின்னர்,
ஆண்டவன் தனது அரிய தயவை அருள நினைந்தான்; அதனால், தவறாத
அன்போடு தொண்டு செய்யும் அடிமை என்ற எண்ணத்தோடு ஒழுகும்
இசறயலை இரக்கத்தோடு தன் கைக்கொண்டு காக்க முன்வந்தான்'' என்றாள்.
என்றவள் கருதத் தக்க தகுதிக் கெல்லாம் மேலாக என்னை ஆட்கொண்ட
கருணை மிக்க வானரசியாகிய மரியாள்.
இசறயல்
(Israel) என்பது ஆபிரகாமின் பேரனான யாக்கோபுக்கு
ஒரு பெயர். அது, பின் அவன் வழியில் வந்த பன்னிரு மரபினருக்குப்
பெயராக வழங்கியது. யூதர் அனைவரும் அம்மரபு வழியில் வந்தோர்.
|