பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 94

      மகன் பிறந்தனால் விளைந்த மகிழ்ச்சியோடு எட்டாம் நாளில் மெய்யான
வேத நூல் நெறி வழுவாமல் செய்ய வேண்டிய சடங்கு
முறைகளைத் திருந்தச் செய்து, கருணையன் என்று பெயரிட்டனர்.
அதன்பின், அழகு பொருந்திய அக்குழந்தையின் கருணையினால் கட்டு
அவிழ்ந்த நாவினால் தன் துன்பம் தீரப் பெற்ற தந்தை சக்கரீயன், நிரம்பிய
உணர்வோடு பேசத் தொடங்கி, தன் வாயால், கடவுள் மீது துதி சொல்லி
முடித்தான்.

      இட்டன - 'இட்ட' என்ற பெயரெச்சம் இடையே 'அன்' சாரியை
பெற்றது.

 
                 49
நிதியிற் றோய்ந்த வழிகிளையோ
     னீர்ப்ப வாசி யோதியபின்
றுதியிற் றோய்ந்த வுரையெவர்க்குஞ்
     சுவையிற் கனிந்து கனிகூறி
மதியிற் றோய்ந்த பதத்தாளு
     மறை தோய் மாட்சி மாதவனு
நுதியிற் றோய்ந்த வாளுயிரீர்
     நோய்கொண் டகன்று போயினரால்.
 
நிதியின் தோய்ந்த அழகு இளையோன் நீர்ப்ப ஆசி ஓதிய பின்,
துதியில் தோய்ந்த உரை எவர்க்கும் சுவையின் கனிந்து கனி கூறி,
மதியில் தோய்ந்த பதத்தாளும் மறை தோய் மாட்சி மா தவனும்
நுதியில் தோய்ந்த வாள் உயிர் ஈர் நோய் கொண்டு அகன்று
                                     போயினர் ஆல்.

      அதன் பின்னர், பிறையில் பதிந்த பாதத்தையுடைய மரியாளும்
வேதநூலில் தோய்ந்து பழகிய மாட்சியுள்ள பெருந்தவத்தோனாகிய
சூசையும் பொன்னில் தோய்ந்த அழகுள்ள சிறுவனாகிய கருணையன் பெருமை பெறுமாறு ஆசி கூறினர். பின், அங்கிருந்த யாவருக்கும்
வணக்கம் தோய்ந்த சொல்லைச் சுவையோடு மனம் கனிந்து இனிக்கக்
கூறினர். அதன்பின் நுனி தீட்டப் பெற்ற வாள் தமது உயிரை அறுப்பது
போன்ற துன்பம் அடைந்து பிரிந்து நசரேத்தூருக்குப் போயினர்.