பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 95

      'கனிந்து கனி கூறி' என்ற விடத்து 'கனிந்து' என்பது கூறுவார்
கனிவாகவும், 'கனி', என்பது கேட்பார் கனிவாகவும் கொள்க. போயினரால்
- 'ஆல்' அசை. மதி - சந்திரன்; இங்கு இளமதியாகிய பிறையைக் குறித்தது.


                  
மரியாளின் பரிவு

 
                   50
கொலைகொள் வாளா லுயிர்பிரிந்த
     கொள்கைத் தன்னார் பிரிந்தினும்வெண்
கலைகொள் பதத்தாள் பிரியாதோர்
     கருணை விளைத்த வன்பொழியா
ளுலைகொள் ளழலிற் நுயர்கொண்டே
     வொளிப்ப வெசித்து மேவியகா
விலைகொள் ளுணர்வோ டன்புணர்ந்தே
     யருளின் பெயரோன் றனையுணர்ந்தாள்.
 
கொலை கொள் வாளால் உயிர் பிரிந்த கொள்கைத்து அன்னார்
                              பிரிந்தினும், வெண்
கலை கொள் பதத்தாள் பிரியாது, ஓர் கருணை விளைத்த
                              அன்பு ஒழியாள்;
உலை கொள் அழலின் துயர் கொண்டே ஒளிப்ப எசித்து
                              மேவிய கால்,
அலை கொள் உணர்வோடு அன்பு உணர்ந்தே, அருளின்
                              பெயரோன்தனை உணர்ந்தாள்.

      மேற்கூறியவாறு, கொலையைக் கொண்டுள்ள வாளால் உயிர் பிரிந்த
தன்மையாக அவ்விருவரும் பிரிந்து சென்றாரெனினும், வெண் பிறையைக்
கொண்ட பாதத்தையுடைய மரியாள் மனத்தால் என்றும் பிரியாது, ஒப்பற்ற
கருணை தோற்றுவித்த அன்பு நீங்காது கொண்டிருந்தாள்; உலையில்
பொருந்திய நெருப்புப் போன்ற துயர் கொண்டு தாம் எரோதுக்கு ஒளித்து
எசித்து நாடு அடைந்தபோது, அலைகின்ற உணர்வோடு அன்பு உணர்ந்து,
அருளின் பெயர் தாங்கிய கருணையனை நினைவு கூர்ந்தாள்.

      
விண்மதியின் ஒருநாள் வளர்ச்சி கலை எனப்படும். நிறை மதிக்குப்
பதினாறு கலைகள். எனவே, கலை இங்குப் பிறை என்ற பொருளில் வந்தது.