பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 96

          51
செய்த வுதவி பாசமெனத்
     திருந்தீ ருயிரை விசித்திடுமாற்
பெய்த வுதவி கொண்டசிலர்
     பேணா தொழிந்தாற் பிறர்துயரைக்
கொய்த வுதவி செய்யுரவோர்
     குன்றாத் தங்கண் ணட்புரிமை
யெய்த வுதவிக் களவன்பு
     மெய்திப் பிறரை மேவுவரால்.
 
செய்த உதவி பாசம் எனத் திருந்து ஈர் உயிரை விசித்திடும் ஆல்.
பெய்த உதவி கொண்ட சிலர் பேணாது ஒழிந்தால், பிறர் துயரைக்
கொய்த உதவி செய் உரவோர் குன்றாத் தம் கண் நட்புரிமை
எய்த உதவிக்கு அளவு அன்பும் எய்திப் பிறரை மேவுவர் ஆல்.

      ஒருவர் மற்றொருவர்க்குச் செய்த உதவி செம்மை கொண்ட இரண்டு
உயிர்களைக் கயிறுபோல் சேர்த்துக் கட்டும். பிறர் தமக்கு வழங்கிய
உதவியைப் பெற்றுக் கொண்ட சிலர் அதனைப் பேணாது மறந்தாலும், பிறர்
துன்பத்தைக் கொய்து களைந்து உதவிய அறிவுத் திறம் படைத்தோர்
தம்மிடையே குறையாத நட்புரிமை தோன்றுமாறு, தாம் செய்த உதவிக்கு
அளவாக உதவி பெற்ற பிறரிடத்து அன்பும் கொண்டு பொருந்தி நிற்பர்.
      
      
உதவி பெற்றவர் நன்றி மறப்பினும், உதவி செய்த உரவோர் உதவி
பெற்றவர்பால் அன்பும் பூண்டு மறவாரென்பது கருத்து உதவி பெற்ற
கருணையன்பால் மரியாளுக்கு அன்பு இருத்தல் வியப்பன்று. விசித்திடுமால்,
மேவுவரால் என்ற ஈரிடத்தும் 'ஆல்' அசை.


                52
மாறா வருளோடு இன்னணமே
     மறைந்த திருவெம் மகற்காணா
தேறா வெகுளி யரசெல்லாச்
     சிறுவர்க் கொல்வா னென்னவுயி