பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 10, 11205

உண்ட சாத்தன் - உண்ணாத சாத்தன், உணல் அற்ற சாத்தன், பசித்த சாத்தன் - இவை பெயரெச்சம்.

நடந்துவந்தான் - நடவாது வந்தான், நடையின்றி வந்தான், வாகனம் ஏறி வந்தான் - இவை வினையெச்சம்.

உண்டல் - உண்ணாமை, உணலறல், பட்டினி;

-இவை தொழிற்பெயர்.

முதல்நிலைகளெல்லாம் நடப்பான், நடவான், உண்பான் உண்ணான் - என விதிக்கும் மறைக்கும் பொதுவாகிய பெயர் ஆதலால், மறையின்று என்று முன்னர்க் காட்டினாம். (66 உரை) 10

விதி மறை எனப்படாதன

75இதுவிதி இதுமறை என்னப் படாசில.

எ-டு: போ, வா; தொடு, விடு; வாழ், கெடு; உலாவு, நில்; உறங்கு, விழி; விரும்பு, வெறு; கொடு, வாங்கு; சா, பிழை; போனான், வந்தான்; நின்றான், இருந்தான்; செத்தான், பிழைத்தான்; விரும்பினான், வெறுத்தான்; உறங்கினான், விழித்தான் - எனத் தெரிநிலைவினையும், செல்வன், வறியன் எனக் குறிப்பு வினையும் வந்தன.

விதிவினை மறைவினை என்னாமையால் பெயர்க்கும் கொள்க.

எ-டு: கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு; உறவு, பகை; இன்பம், துன்பம்; ஆண், பெண்; பகல், இரவு; ஒளி, இருள்; மெய், பொய்; உண்மை, இன்மை எனவரும்.

இவைகளை இணைத்து ஒன்றற்கு ஒன்று விதியாயும் மறையாயும் நிற்றல் காண்க.

[வி-ரை: இவ் வெடுத்துக்காட்டுக்கள் தனித்தனியே நோக்குங்கால் ஒவ்வொன்றும் விதியே. இணைத்துக்காணும் போதுதான் விதி மறை என்ற கருத்துக்கு இடம் ஏற்படும், கிழக்குக்கு மறுதலை மேற்கு, உறவுக்கு மறுதலை பகை என்றாற் போல.]