செயப்பாட்டுவினையாவது வினைமுதல், செயப்படுபொருள், தொழிற்பெயர் மூன்றன் பயனிலையாய் வரும். இனி, செயப்பாட்டு வினையாலணையும் பெயர் வினைமுதல், செயப்படுபொருள், தொழிற் பெயர் என்பனவாகவும் வரும். முதல்நிலை - தொழிற்பெயர் - முற்று - பெயரெச்சம் - வினையெச்சம் - வினைமுதல் - செயப்படுபொருள் முதலியவற்றில் படுசொல் வாராதிருந்தும் படுசொற் பொருள் அமைந்தும் வரும். இனி, முதல்நிலை முதலியவை படுசொல் பெற்றே வருதலும் உண்டு. முற்று - தொழிற்பெயர் முதலியவற்றுள் படுசொல் வரினும் படுபொருள் அமையாமலும் வரும். பெயரின் பின்னரும் வினையெச்சத்தின் பின்னரும் படுசொல் வந்தும் வேறுபொருள் படுதலும் உண்டு; தன் பொருள் பிறபொருள் என்னும் இரண்டற்கும் பொதுவாய்ப் படுசொல் பொருந்தி நிற்றலும் உண்டு; படுசொல் வாராது படுபொருள் தருதலும், படுசொல் வந்தே படுபொருள் தருதலும் உண்டு. படுசொல் மறைந்தவழியும் வேறுபொருள் படாதாயின் தொகுக்கப்படும். படுசொல் தொகுக்கவழி வேறு பொருள் படுவதாயின் படுசொல் தொகுக்கப்படாது. வேற்றுமை வினை பண்பு உவமை உம்மை அன்மொழித் தொகைகளோடு படுதொகை என்பதனையும் சேர்த்துத் தமிழில் தொகை ஏழு என்பாரும் உளர். வினைகள், சிற்றறிவோர் வினை - பேரறிவோர் வினை - என இருவகைப்படும். ஒவ்வொரு வகையும் தனக்குப் பயன்படும் வினை. பிறருக்குப் பயன்படும் வினை, தனக்கும் பிறருக்கும் பொதுவாகப் பயன்படும் வினை, தனக்கும் பிறருக்கும் பயன்தாரா வினை என நான்கு பகுப்புக்களை உடையது. அவ்வினைகள் மனம் மொழி மெய் அறிவு என்பனவற்றின் அசைந்தவினை, மனம் மொழி மெய் அறிவு என்பனவற்றின் அசைவு இல்லாத வினை, நல்வினை, தீவினை, வெறுவினை, அறிந்து செய்வினை, அறியாது செய்வினை, அசேதனம் செய்வினை, தீவினை நல்வினையாகும் வினை, நல்வினை தீவினை ஆகும் வினை, செய்யா வினையாகும் செய்வினை, செய்வினையாகும் செய்யாவினை, ஒன்றோ டொன்று கலக்கும் வினைகள் ஒன்றோடொன்று கலவாதவினைகள், |