பக்கம் எண் :

 நூலமைப்பு : வினையியல்19

ஒன்றனைவிடுத்து ஒன்று நில்லாத வினைகள், இடையே வினை இடையீடுபடினும் பயன்தரும் வினைகள், இடையே வினை இடையீடுபடின் பயன்தாரா வினைகள் முதலாகப் பலவகைப்படும்.

தொழிற்பெயர்-எழுவாய், செயப்படுபொருள், கருவி, இடம், பெயரெச்சம், முற்று என்பனவாக வரும் எனவும், தெரிநிலை முற்றும் குறிப்புமுற்றும் பெயரெச்ச வினையெச்சங்களாக வரும் எனவும், பெயரெச்சவினையெச்சங்கள் முற்றாக வரும் எனவும் இலக்கண ஆசிரியருள் சிலர் கூறுவார்கள்.

வினையாலணையும் பெயர்கள் - வினைமுதல், செயப்படுபொருள், கருவி, இடம், தொழிற்பெயர் என்ற ஐந்தாகவும் வரும்; எட்டு வேற்றுமை உருபுகளை ஏற்று அவற்றின் பொருளாகவும் வரும்; ஈற்றயல் திரிந்தும், பெயரெச்சவினையெச்சங்கள் ஆகியும், ஈறு இகரமாயும் வரும் அங்ஙனம் ஈற்றெழுத்து இகரமாகிய வினையாலணையும் பெயர்கள் வினைமுதல், செயப்படுபொருள், கருவி, இடம், வினையெச்சம் என்ற பொருள்களில் வரும். உருபும் படுசொல்லும் தொக்கு வினைமுதலாயும் செயப்படுபொருளாயும் வருதல் முதலியனவும் காணப்படும்.

பெயரெச்ச வினையெச்சங்கள் பற்றி இலக்கண ஆசிரியர்கள் இடையே பலவேறு வகைப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. எச்சம் என்பன இல்லை இவை அடைச் சொற்களே என்பாரும், முற்றின் விகாரமே எச்சம் என்பாரும், எச்சம் ஒன்றே என்பாரும், இரண்டே என்பாரும், தன்வினை, பிறவினை என்ற இரு பகுப்புக்களையே எச்சங்கள் உடையன என்பாரும், மூன்று காலங்களுக்கும் உரிய மூவகை எச்சங்களே கொள்ளப்படும் என்பாரும், எச்சங்கள் தலைமையெச்சம் தலைமையில்லா எச்சம் என்ற இரு பகுப்பினவே என்பாரும், காரணஎச்சம் காரியஎச்சம் என்ற இரு பகுப்பினவே என்பாரும், முதல்வினை எச்சம் சினைவினை எச்சம் என்ற இரு பகுப்பினவே என்பாரும், இயல்பெச்சம் திரிபெச்சம் என்ற இரு பகுப்பினவே என்பாரும், விரிதொகை என்ற இரு பகுப்பினவே என்பாரும், கொண்டு முடியும் சொல் பற்றிப் பெயரெச்சம் வினையெச்சம் என்ற இரு பகுப்பினவே என்பாருமாகப் பலப் பல மதங்களைக் கொண்ட இலக்கண ஆசிரியர்கள் கருத்தைப் பலரும் ஏலார்.