வேறு - இல்லை - உண்டு - யார் - வேண்டும் - தகும் - படும் என்ற ஏழு குறிப்புவினைமுற்றுச் சொற்களும், வினையெச்சம், பெயரெச்சம், வியங்கோள் வினைமுற்று என்ற வினைப்பகுப்புக்களும் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவானவை. வினைச்சொல்லின் இலக்கணம் பகுத்து விளக்குதற்கு அரியது. பலவினைச் சொற்களுக்குப் பொருள் விளங்க உரை எழுதும் உரையாசிரியர்கள் சொற்குணம் வாளாபோயினர். வினைப்பகுதிகளை வரையறுத்தலினும் கருத்துவேறுபாடு உண்டு. ஒரே படியவாகிய முதல்நிலைகள் விகுதியொடு பொருந்துங்கால், பலவாக வேறுபட்டு வருதலும் உண்டு. ஒரே தொழிற்பெயர் பலவாறு பொருள்பட்டு நான்மடியாகுபெயர்அளவும் பொருள் விரிதலும் உண்டாம். ஆயினும் அவை யாவையும் முதல்நிலை, தொழிற்பெயர், முற்று, பெயரெச்சம், வினையெச்சம் என்ற ஐவகையுள் அடக்கிக் கொள்ளப்படும். |