தளபெடை, நெட்டெழுத்தளபெடை, ஒற்றெழுத்தளபெடை என எழுத்து நோக்கி மூவகையாகவும் ஆக்கப்படும். அவை மொழி முதல் இடை கடை என்னும் மூவிடத்தும் வரும். போலி எழுத்துக்கள் எனப்படும் இணைஎழுத்துக்கள், செய்யுட்கண் மோனைத்தொடைக்கும் எதுகைத்தொடைக்கும் பயன்படுதலால், அவற்றைப் பயனற்றவை என்று தள்ளாது பயனுடையவை எனக் கோடல் வேண்டும். உருபு முதலியன தொகுக்கப்பட்டு வழங்கும் தொகை நிலைகளே தொகாநிலைகளின் பொருளைத் திரிபின்றிப் புலப்படுத்தலால், உருபு முதலியன வெளிப்பட்டு நிற்றலால் பயன் என்னை எனின், உருபு முதலியன தொக்கவழிக் கருதிய பொருள் தோன்றுதலும், கருதியபொருள் அன்றி வேறொரு பொருள் தோன்றுதலும், பலபொருள்கள் தோன்றதலும் நிகழ்தல் கூடும் ஆதலின், கருதியபொருள் தோன்றுதற்கண் ஐயம்திரிபு ஏற்படும் இடங்களில் எல்லாம் உருபு முதலியவற்றை விரித்தே வழங்குதல் வேண்டும் என்று கொள்க. உருபு தொக்கவழி ஒருபொருளேயன்றி ஏழு என்ற எல்லைகாறும் பொருள்விரித்து உரைத்தற்குத் தமிழ்ச் சொற்றொடர்க்கண் வாய்ப்பு உண்டு. உருபு தொக்கவழி ஒரு சொல்லே ஒருகால் எழுவாயாகவும், ஒருகால் செயப்படுபொருளாகவும் பொருள்தடுமாறி அமையக் கூடிய தொகைகளும் உள. தொகைநிலை தொகாநிலை என்ற சொற்றொடர்களின்விளக்கம் பற்றி இலக்கண ஆசிரியர்களிடையே மூவகை வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. வேற்றுமை உருபு முதலியன இடையே தொகுத்தலின் தொகை என்பர் ஒருசாரார். நிலைமொழி வருமொழிகள் உருபுகளோடு இணைந்து விட்டிசையாது. நிலைமொழி போலவே நின்று வருஞ்சொற்களோடு முடிதலேதொகை என்பர் ஒருசாரார். பல சொற்கள் கூடி ஒருசொல்போல ஆகி விட்டிசைக்காது. பிரித்தற்குப் பொருந்தாது ஒருசொல் நீர்மையவாகத் தொகுதலே தொகை என்பர் ஒருசாரார். |