பக்கம் எண் :

 நூலமைப்பு : ஒழிபியல்23

இம்மூவரும் முறையே உருபு முதலியவற்றை இடையே உரைத்தல், விட்டிசைத்து உரைத்தல், வெவ்வேறு உரைத்தல் என்பனவற்றையே தொகாநிலை என்பர். இவர்தம் கருத்துக்களுள் எதனையும் எளிதாக மறுத்து மற்றொன்றை நிலைநாட்டுதல் என்பது இயலாது.

அறுவகைத் தொகையும் அமையும் போது, ஒன்றே தொகுதலும் பலவே தொகுதலும். ஆறுவகையும் ஒருசேரத் தொகுதலும், உருபேதொகுதலும், பொருளேதொகுதலும், உருபும் பொருளும் ஒருங்கே தொகுதலும், உருபும் பொருளும் ஒருங்கு பல தொகுதலும், பொருளும் உருபும் பொருளும் தொகுதலும் முதல் இடை கடை என்ற மூவிடத்தும் தொகுதலும், கடை இடை என்ற ஈரிடத்துத் தொகுதலும் நிகழும்.

பண்புகளுள் வெண்மை என்பது ஒன்றே ஒரு பெயருக்கு அடையாகுங்கால் இனம் பற்றியும், இனம் பற்றாமலும், தனக்குரிய சினையை விட்டு முதலைப் பற்றியும், எதிர்வு - இழிவு - சாதி - புதுமை - பொய் - உள்ளீடின்மை - இயல்பு - கலப்பின்மை - தனிமை - நிறமின்மை - மந்தம் - பண்புப்போலி முதலிய பற்றியும் வருதலின், பண்புத்தொகை விதி பகரின் பெருகும் என்று தொடங்கும் ஆசிரியரால் பண்புத்தொகையின் பலவகைகளுள், பண்பு முன் வருதல் - இருபண்பு அடுத்தல் - இருபண்பொடு பொருள் இயைதல் - இருபண்புகள் சேர்ந்தே ஒரு பொருளைக் குறிப்பிடல் - இயற்பெயர் முன்னும் சிறப்புப்பெயர் பின்னும் வருதல் - சிறப்புப்பெயர் முன்னும் இயற்பெயர் பின்னும் வருதல் - பொதுப்பெயர் முன்னும் சிறப்புப்பெயர் பின்னும் வருதல் - பின்மொழி ஆகுபெயராதல் - முன்மொழி ஆகுபெயராதல் - இருமொழி ஆகுபெயராதல் - ஒரு பொருட்கு இரு பெயராகிவருதல் - முதற்சொல் தமிழ்ச்சொல்லாதல் முதற்சொல் வடசொல்லாதல் - இருசொற்களும் தமிழ்ச்சொல்லாதல் - இருசொற்களும் வடசொல்லாதல் - வண்ணம், வடிவு, அளவு, சுவை பற்றி வருதல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

சில பெயரெச்சங்களும், சில வினைத்தொகைகளும், உவமத் தொகைகளும், வண்ணச்சினைச் சொல்லும் வடமொழியில் பண்புத் தொகையுள் அடங்கும்.