பக்கம் எண் :

24இலக்கணக் கொத்து 

மறை, இன்மை - பிறிது - மறை என மூவகைப்படும். அவற்றை வடமொழிக்கண் அ-அந்-ந-நி-கு-வி என்ற உபசர்க்கங்கள் பெறப்படுத்தும்.

மறையின் மூன்று வகைகளுள் இன்மை என்னும் அபாவம், என்றும் அபாவம், இன்மையது அபாவம், ஒன்றினொன்று அபாவம், உள்ளதன் அபாவம், அழிவுபாட்டபாவம் என ஐவகைப்படும்.

எழுத்தாற்றல், சொல்லாற்றல், பொருளாற்றல் மொழிப் பொருட்காரணம் இவற்றுள்கொள்ளத்தகுவனவற்றைக்கோடலே முறை. அவ்வாற்றல் கெட்டனவற்றையும் நுணுகி அறிதல் வேண்டும்.

முன்பு உள்ளநிலை, இன்று உள்ளநிலை, சொல் ஒற்றுமை, என்ற நிலையை ஓர்ந்து முப்பது எழுத்துக்களும் முறையே ஒற்றுமையுடைய எனினும், கச-சய-வய-மன-லள-வல என்பன சிறப்பாக ஒற்றுமை உடைய எழுத்துக்களாகும்.

எழுத்துச்சாரியைகள் வருங்கால், ஓரெழுத்திற்கு ஒரே சாரியையாகவும், ஓரெழுத்திற்கே பல சாரியைகளாகவும் பல எழுத்திற்கு ஒரே சாரியையாகவும், தொடர்ந்த பல எழுத்திற்கு ஒரே சாரியையாகவும், சாரியை செய்யுளுள் கலந்து தோன்றும் சாரியையாகவும் வரும். சாரியை இன்றி எழுத்துக்கள் தனித்தும் தொடர்ந்தும் வருதலும் உண்டு.

தொடர் மொழிகள் அவாய்நிலை, தகுதி, அண்மைநிலை என்ற முத்திறங்களில் ஒன்றனை அடிப்படையாகக்கொண்டு அமையும்.

புணர்ச்சியாவது பொருத்தப்புணர்ச்சி, பொருத்தமில் புணர்ச்சி, பொருத்தம் இன்மையும் உடைமையும் ஒருங்கே பொருந்தும் புணர்ச்சி, வழுவுடைப்புணர்ச்சி என நான்கு வகைப்படும்.

பொருத்தப் புணர்ச்சியும் வழுவுடைப் புணர்ச்சியும் இலக்கண ஆசிரியர் பலராலும் விளக்கப்பட்டமையின் இந்நூலுள் இடையன இரண்டுமே சுட்டப்பட்டன.