‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும்’ - தொ.சொ. 158 எனக் கருவியாகவும், ‘கொடைஎதிர் கிளவி’ - தொ.சொ. 109 எனக் கொள்வோனாகவும், ‘முன்மொழி நிலையலும்’ - தொ.சொ. 419 என இடமாகவும், பொருளிற்கு வேறு என்றுகூறி, ‘கமம்நிறைந்து இயலும்’ - தொ.சொ. 355 ‘உரு உட்குஆகும்’ - தொ.சொ. 302 ‘செல்லல் இன்னல் இன்னா மையே’ - தொ.சொ. 304 ‘எல்லே விளக்கம்’ - தொ.சொ. 271 ‘கொல்லே ஐயம்’ - தொ.சொ. 270 எனப் பொருளிற்கு வேறு அன்று என்றும் கூறினார். அச்சொற்கு ஒரு குணமே அன்றிப் பலகுணம் பொருந்தாது. அவர்க்கும் அதுவே கருத்து. அக்கருத்து அறிதல் அருமை நோக்கி ‘நூலாசிரியர் கருத்தினை நோக்காது’ என்றாம். இக்கருத்துச் சொற்கேயன்றி அவர் கூறிய விதி விலக்கிற்கு எல்லாம் பொது. [வி-ரை: சொல்லிலக்கணம் பற்றி இவ்வாசிரியர் பலர் மதமாய் விரித்து உரைத்துள்ளன யாவும் பிரயோக விவேகத்திலும் காணப்படுகின்றன. அவற்றை நோக்குவோம்: குடம் அறியாதானுக்குக் குடத்தைக்காட்டி இது குடம் என்றால் இது என்னும் சுட்டுப்பெயரும் குடம் என்னும் பொருளும் பேதமின்றி அபேதமாய்த் தோன்றும் என்றும், சொல்லை நித்தியம் என்றும், விபு என்றும், திரவியம் என்றும், சத்தநூலார் கூறுவர். அர்த்தநாரீசுவரன் என்னும் பார்வதிபரமேசுவரன் போலப் பொருளும் சொல்லும் பேதாபேதமாய் வரும் என்பாரும் உளர். காளிதாசனும் ‘வாகர்த்தாவிவ’ என்னும் சுலோகத்தால் அவ்வாறு கூறுவன். சொல்லாவது பொருளைக் காரணமாய் நின்று உணர்த்துதற்கு உரியதன்றோ எனின், |