| பாயிரவியல் - நூற்பா எண். 7 | 109 |
[வி-ரை: வெளிப்படாத விதிகளை, கூறியது கொண்டு அதனோடு தொடர்புடைய கூறாததனையும் கொள்ளும் வாய்ப்பாகிய உபலக்கணத்தால் ஆராய்ந்து உணர்தல்வேண்டும். ‘முதல் தனிவரின்சுட்டே’ என்பதனுக்கு, முதல் கூடிவரினும் சுட்டு என்றும் பொருள் கொள்ளுதல் இதற்கு எடுத்துக்காட்டு. எழுத்திற்குப் பெயரிடுமிடத்தும் சந்திநோக்கியும் யாப்பு நோக்கியும் வரைந்த நூற்பாக்களில் நன்னூலார் சுட்டு தனித்தும் நிற்கும் என்பதனையும், ‘சுட்டியா எகரவினாவழி’ முதலிய ஆறு நூற்பாக்களில் சுட்டு கூடியும் வரும் என்பதனையும் விளக்கியுள்ளார். ‘இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்கு இன்னென் சாரியை இன்மை(யும்) வேண்டும்’ என்னும் நூற்பாப்போலத் ‘தனிவரினும்’ என்பது உம்மை தொக்குத் ‘தனிவரின்’ என நின்றது எனலாம். ‘தனிவரின்’ - தனித்து வந்தால் - என்பதனால் தனித்து வருதல் சிறுபான்மை என்பதும் கூடிவருதலே பெரும்பான்மை என்பதும் புலனாகின்றன. ‘முதல்தனிவரின்’ என்ற தொடரை முதல்வரின் எனப்பிரித்துத் தாப்பிசையாய்ப் பொருள் செய்தலும்ஆம். தம் அறிவைச் செலுத்தி நூற்பாப் பொருளை ஆராயாது பிறர் கூறியவற்றையே ஏற்று முடிவு செய்பவரும் உளர். தொல்காப்பியத்திற்குப் பிறகு நன்னூலுக்கு இணையான நூல் எதுவும் இல்லை. செய், செய்யாய் என்னும் வினைகள் அவ்வாய்பாடுபற்றி வரும் ஏனைய வினைகள் பலவற்றையும் சுட்டும். ‘ழகர உகரம் நீடிடன் உடைத்து’ என்ற குற்றெழுத்து அளபெடை, ஏனைய உயிர்மெய் உகரங்கள் கெடுப்பதூஉம், துன்புறூஉம் என்றாற்போலக் குற்றெழுத்தளபெடையாதலையும் சுடடும். தாளை வணங்காத் தலை என்பது சீர்கேளாத செவி, தாள்காணாத கண், புகழ்பேசாத வாய் முதலியவற்றையும் குறிக்கும். காணும் கண்-கேட்கும் செவி, பேசும் வாய் முதலியவற்றையும் குறிக்கும். இவை எல்லாம் உபலக்கணத்துக்கு எடுத்துக்காட்டு. |