12 | வினையெச்சம் ஒன்றையே வெவ்வேறு என்றல் |
செய்து செய்பு முதலாயின வெவ்வேறு ஆதலால், இவை எல்லாவற்றையும் கூட்டி, வினையெச்சம் என்று ஒரு பெயரிடல் பொருந்தாது: அன்றியும் வினையைக் கொள்ளும் எட்டு உருபுகளையும், உவம உருபுகளையும், பிறவற்றையும் வினையெச்சம் என்று பெயரிட்டு வழங்காமை காண்க என்பர். பெயரெச்சத்திற்கும் இஃது ஒக்கும். 13 | வினையெச்சம் ஈறுசொல் பற்றி இரண்டு |
செய்து செய்பு முதலாக ஈறுபற்றி வருவன எல்லாவற்றையும் ஒன்றாக்கி, வான் - பான் - பாக்கு - பின் - முன் - கால் - கடை - வழி - இடத்து முதலாகச் சொல் பற்றி வருவன எல்லாவற்றையும் ஒன்றாக்கி, வினையெச்சம் என்பது இரண்டே என்பர். [வி-ரை: ‘செய்து செய்பு செய்யாச் செய்யூச் செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர் வான்பான் பாக்குஇன வினையெச் சம்பிற ஐந்துஒன்று ஆறுமுக் காலமும் முறைதரும்.’ - ந. 343 ‘செய்து செய்யூ செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செய செயற்குஎன அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.’ - தொல்.சொ. 230 ‘பின்முன் கால்கடை வழியிடத்து என்னும் அன்ன மரபின் காலம் கண்ணிய என்ன கிளவியும் குறிப்பே காலம்’ - தொல். சொ. 231 என்ற நூற்பாக்களை நோக்குக.] இன்னும் பலபல இலக்கண மாகச் சொன்னார் சிலரே; துணியார் பலரே. |