கட்டு என்பதை முற்றுகர முற்றாக்க வேண்டில் எடுக்க; குற்றுகரத்தொழிற்பெயர் ஆக்கவேண்டில் படுக்க. ‘நெறிநின்றார் நீடுவாழ்வார்’ - கு. 6 என்பதனை முறையே பெயராக்க வேண்டில் எடுக்க; முற்றாக்க வேண்டில் படுக்க. செய்யும் என்பதை எச்சமாக்கவேண்டில் எடுக்க; முற்றாக்க வேண்டில் படுக்க. அம்பலத்தாடி என்பதனைப் பெயராக்கவேண்டில் எடுக்க. எச்சமாக்கவேண்டில் படுக்க. இவைபோல்வனவெல்லாம் பலபொருட்கு ஒரு வடிவு ஆகிய தனிமொழி. ‘குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய்வைத்து ஊத’ - சிலப்.4 - 15,16. இது சொல்வேறுபடாது பொருள் வேறுபட்டது. அஃதழகிது, அதனை; அவற்றை; நிறுவென்றான், கூவென்றான், ஏயென்றான்; சொல்லென்றான், விள்ளென்றான்- இது பொருள் வேறுபடாது சொல்வேறுபட்டது. செம்பொன்பதின்பலம் - இது சொல்லும் பொருளும் வேறுபட்டது. இவற்றிற்குப் பொருள் விளங்க எடுத்தும் படுத்தும் சொல்லுக. இவை போல்வன எல்லாம் பலபொருட்கு ஒரு வடிவாகிய தொடர்மொழி. [வி-ரை: பெயர்ச் சொற்கள் விகுதியிலும் வினைச்சொற்கள் பகுதியிலும் பொருள் சிறத்தலின் வினையை எடுத்தல் ஓசையானும் படுத்தல் ஓசையானும் கூறுக என்பது பொதுவிதி. ‘எவன்’ என்பது படுத்தல் ஓசையால் பெயராகும் என்பார் நச்சினார்க்கினியரும், - தொ. எ. 122 நச். |