பொதுவாகத் தமிழிலும் வடமொழியிலும் நிறைந்த புலமையுடன் தமிழிலக்கணம் யாக்கப்புக்க இவ்வாசிரியருக்கு, தாம் சைவத் துறவியாதலான், சைவ சமய நூல்களிடத்தும் சிவபெருமான் திருவடிகளிடத்தும் நிறைந்த பற்றுண்டு என்ற செய்தி ஆட்டாண்டு வெளிப்படுகிறது. சில காண்போம்; ‘வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது’ - மூன்று - பதி, பசு, பாசம் - 6 உரை ‘‘திருவைக் கோவைக்கும் கூட்டுக. மாணிக்கவாசகர் அறிவால் சிவனே என்பது திண்ணம். அன்றியும், அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர் வாக்கில் கலந்து இரந்து அருமைத் திருக்கையால் எழுதினார். அப்பெருமை நோக்காது சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்குவேள்மாக்கதை முதலியவற்றோடு சேர்த்துச் செய்யுட்களோடு ஒன்றாக்குவர். இறையனார் அகப்பொருள் முதலான இலக்கணங்களையும், தேவாரம் - திருவாசகம் - திருவிசைப்பா - திருப்பல்லாண்டு - பெரியபுராணம் - சிவஞானபோதம் - சிவஞான சித்தியார் - சிவப்பிரகாசம் - பட்டினத்துப்பிள்ளையார்பாடல் முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணாது, நன்னூல் - சின்னூல் - அகப்பொருள் - காரிகை - அலங்காரம் முதலிய இலக்கணங்களையும் பத்துப்பாட்டு - எட்டுத்தொகை - பதினெண் கீழ்க்கணக்கு - இராமன் கதை - நளன் கதை - அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணி, வாணாள் வீணாள் கழிப்பர். அவர் இவைகள் இருப்பவே அவைகளை விரும்புதல் என்னெனின், பாற்கடலுள் பிறந்து அதனுள் வாழும் மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை விரும்புதல் போல, அவர் இயற்கை என்க.’’ - 7 உரை அரிய விதியாவது ‘அகரம்போல நின்றனன் சிவனும் சேர்ந்தே’ ‘அகர உயிர்போல் அறிவாகி எங்கும், நிகரில் இறை நிற்கும் நிறைந்து, (7 - உரை) என்ற எடுத்துக்காட்டுக்களை நோக்குக. |