பக்கம் எண் :

1000தணிகைப் புராணம்

பயந்தோர்ப் பழிச்சல்

அஃதாவது தலைவன் இத்தன்மையாளைப்பெற்ற தந்தை தாயர் வாழியவெனப் பழிச்சாநிற்றல்.

 கயந்தலைக் கும்பல் வெதிர்சாய்த் தளிக்குங் கணவரைவாய்
 வயந்தலைக் கொண்ட விவட்பயந் தோனும் வளர்த்தெடுத்துப்
 பயந்தலைக் கொண்டநற் றாயும் பணிலங்கை யேந்தியுநல்
 நயந்தலைக் கொண்ட நளினங்கை யேந்தியும் வாழியரே.

(இ - ள்.) யானைக்கன்றினுக்கு மூங்கின் மரங்களைச் சாய்த்துக் கொடுக்கும் ஆண்யானைக் கூட்டமுடைய வரையினிடத்து வென்றியை மேற்கொண்ட இத்தலைவியைப் பெற்றவனும், வளர்த்தல் செய்தெடுத்துப் பயனையடைந்த நற்றாயும் பாஞ்ச சன்னியமென்னும் சங்கினைத் தாங்குதல் செய்தும், நல்ல இன்பினைத் தன்னிடத்துக்கொண்ட தாமரைப்பூவினைக் கையிற்றாங்கியும் வாழ்வாராக வென்க.

(வி - ம்.) கயந்தலை - யானைக்கன்று. வெதிர் - மூங்கில். கணம் - கூட்டம். வயம் - வெற்றி. பணிலம் - சங்கு. நளினம் - தாமரை - ஈன்றோர் சங்கநிதியும், பதுமநிதியும் கைக்கொண்டு வாழ்க என்னும் பொருள்தோன்றல் காண்க. வாழிய : வியங்கோள். மெய்ப்பாடு : உவகை. பயன் : மகிழ்தல்.

(183)

கலவியின் மகிழ்தல்

 அயிலுந் தொழும்விழி விஞ்சையர் நாட்டினை அச்சுறுத்தக்
 குயிலுந் தொழுமொழி கின்னரர் நாட்டைக் குழைப்பவைகும்
 மயிலுந் தொழுமெழின் மாதர்நல் லாண்மணிக் கொங்கைதழீஇப்
 பயிலுந் தொறும்விருந் தாயின ளீதென்ன பண்பிவட்கே.

(இ - ள்.) (தமக்கிச் செயலில்லையென) வேற்படையும் வணங்கு தற்கேதுவாகிய விழியான் வித்தியாதர நாட்டின் கண்ணுள்ளாரை அச்சமுறும் வண்ணஞ்செய்ய. (இவ்வின்னிசை இல்லையெனக்) குயிற்பறவையும் வணங்குதற்கேதுவாகிய மொழியான் கின்னரநாட்டின்கண்ணுள்ளார் குழைதலுறும் வண்ணந்தங்கும் (இவ்வழகின் மென்மைத் தன்மையும் எனக்கில்லையென) மயிற்பறவையும் வணங்குதற் கேதுவாகிய அழகினையுடைய கண்டார்க்குக் காதலைத் தருகின்ற நல்லாளுடைய அழகிய தனங்களைத் தழீஇப் பழகுங் காலமெல்லாம் புதியளாயினள் இவட்கீதென்ன குணமென்றானென்க.

(வி - ம்.) அயில் : ஆகுபெயர். விஞ்சையர் - வித்தியாதரர். கின்னரர் - கந்தருவசாதியார். மாதர் - காதல். பயிறல் - பழகல். விருந்து - புதுமை. பண்பு - குணம். மெய்ப்பாடு : உவகை. பயன் : மகிழ்தல்.

(184)

பாங்கனை யுண்மகிழ்ந்துரைத்தல்

அஃதாவது தலைவியைத் தன்மாட்டெளிதிற் கூட்டுவித்த பாங்கனை உண்மகிழ்ந்துரையாநிற்றல்.