பக்கம் எண் :

களவுப் படலம்1001

 அம்மைப் பிறப்பி னுஞற்றுநல் லூழி னடுத்தெளிதில்
 இம்மைப் பிறப்பினிம் மாதினைக் கூட்டிய வேந்தலிடை
 மும்மைப் பிறப்புல கத்தினிற் கேண்மை முதிர்கவென்றும்
 உம்மைப் பிறப்பு முளதேன்மற் றாங்கு முறுதகவே.

(இ - ள்.) முற்பிறப்பின் நாமியற்றிய நல்லூழினால் (இவண்) பொருந்தி எளிதாக இப்பிறப்பினில் இம்மாதினை நம்முடன் சேர்த்த (பாங்கனாகிய) தலைவனிடத்து முற்பிறப்பு, இப்பிறப்பு, இனிவரும் பிறப்பையுமுடைய இவ்வுலகத்தின்கண் அந்நட்பு முதிர்வதாக. எக்காலத்திலாயினும் வருபிறப்பு நமக்கு உளதாமாயின் அப்பிறவியிடத்தும் இந்நட்பு நிலவுகவென்றா னென்க.

(வி - ம்.) அம்மை - முற்பிறப்பு. மும்மைப் பிறப்புலகம் - முற்பிறப்பு, இப்பிறப்பு, இனிவரும் பிறப்பு. ஆங்கும் - அப்பிறப்பிலும் கேண்மை உறுதகவெனக் கூட்டுக.

(185)

அணிதிருத்தல்

அஃதாவது தலைவன் தலைவியோடு கூடிய கூட்டத்தின்கட் சிதைந்த அணிகலன்களைத் திருத்தியமைத்தல்.

 கருமந் தழுநர் மனம்போ லிருள்குழல் கைபுனைந்து
 தருமந் தழைந ருளம்போ லொளிர்நுத றைவந்துமின்
 பருமந் தழையப் பயிற்றிப் பதநூ புரந்திருத்தி
 அருமந்த மெய்ம்முழு துந்தொட வென்னோ வருந்தவமே.

(இ - ள்.) கருமம் (உறுதிப் பொருளைப் பயக்குமென அக்கருமத்தினை) தழுவுகின்ற கருமிகள் மனம்போல இருட்சியுற்ற கூந்தலினை அலங்கரித்து அறச்செயல் தழைத்தல் செய்கின்றவருள்ளத்தினைப்போல ஒளிர்கின்ற நெற்றியினைத் தடவிப் பதினெண்வகைக் கோவையாகிய பருமமானது தழைத்தல் செயப் பலகால் பழக்கிப் பாதத்தின் கண்ணுள்ள சிலம்புகளைத் திருத்தல் செய்து அருமருந்தன்ன உடன் முழுதும் தொடுவதற்கு யான்செய்த அரிய தவம் யாதோ வென்றானென்க.

(வி - ம்.) கருமமே வீடளிக்குமெனக் கொள்பவர் மீமாம்ச மதத்தினர். பருமம் பதினெண்வகைக் கோவை. இது மேகலையின் பேதம். அருமருந்தன்ன : மரூஉ. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : மகிழ்ச்சி.

(186)

அணிந்ததுநாண அறிந்துளந் தெளித்தல்

அஃதாவது தலைவன் கூட்டத்தாற் சிதைந்த அணிகலன்களைத் திருத்தியமையறிந்து உளத்தின்கட் டலைவி நாணுதலுற அதனைத் தலைவன் தெளித்தல்.

 பொன்னே மணியே புனக்கிளி யேபுயல் வாயுமிழ்ந்த
 மின்னே யமிழ்தே விளக்கொளி யேவிரைப் பூங்கொழுந்தே
 கொன்னே யயிர்த்துள நாணே லொளிருநின் கோலமெல்லாம்
 நின்னே யனையவ டன்னணியாக நிகழ்த்தினமே.